தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் (80), வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்றும் வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் திரைவாழ்க்கையில் முக்கியமான நபராகவும், பல திரைப்படங்களில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்தவருவான டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கும் கமல்ஹாசன், “டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர். அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல. அவரோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை.
அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மீது பற்று கொண்ட திரையுலக நண்பர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தன் வருத்தங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, காதலா காதலா, பாபநாசம் உள்ளிட்ட படங்கள் தொடங்கி சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.