செய்தியாளர்: சுப்பையா
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. 90களில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய இவர், கடந்த 1996-ஆம் ஆண்டு நளினி பாய் என்பவரிடம் இருந்து, அவருக்குச் சொந்தமாக கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்த 5 கிரவுண்டு மற்றும் 454 சதுர அடி நிலத்தை வாங்கி, அங்கு வணிகவளாகம் ஒன்றைக் கட்டத் திட்டமிட்டார்.
அதன்படி அந்த இடத்தை, ஸ்ரீஅபிராமி பவுண்டேஷன் என்கிற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து வணிகவளாகம் ஒன்றினை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் 3.58 கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்திவந்த நிலையில், கட்டுமான பணியையும் முடிக்கவில்லை. 2004ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டுமான பணிகளைக் கைவிட்டு, அந்த இடத்தைக் கையகப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அந்தக் கட்டுமான நிறுவனத்திற்கு எதிராகவும், சொத்தை மீட்டுதரக் கூறியும் கவுண்டமணி தரப்பில் இருந்து 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “கட்டுமானப் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு பணம் தராவிட்டால்தான் அதைக் கேட்க முடியும். முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே நடிகர் கவுண்டமணியிடம் அந்த கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளது. எனவே நடிகர் கவுண்டமணி இடம்பெற்ற ஐந்து கிரவுண்ட் 456 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும், 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் கவுண்டமணிக்கு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: கொல்கத்தா | தொடரும் உண்ணாவிரத போராட்டம்.. 50 மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!
நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கட்டுமான நிறுவனம் 2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கவுண்டமணியிடமிருந்து பணம் பெற்றபிறகும் அந்நிறுவனம் கட்டுமான பணியை முடிக்காததால், அந்தச் சொத்தை சட்டப்பூர்வமாக வைத்திருக்க முடியாது என்றும், அதைத்தொடர்ந்து வைத்திருக்க உரிமை இல்லை என்றும் கூறி தனி நீதிபதியின் உத்தரவை இன்று உறுதிசெய்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில்தான், இன்று நீதிமன்ற அமீனா மற்றும் போலீஸ் பாதுகாப்போடு அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் உடைமைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மீட்கப்பட்ட இடத்தை பூட்டி நடிகர் கவுண்டமணி தரப்பு வழக்கறிஞர் சசிகுமார் முன்னிலையில் மதேஸ் என்பவரிடம் அதற்கான சாவியை நீதிமன்ற ஊழியர்கள் ஒப்படைத்தனர்.