ஃபகத் ஃபாசில் - மலையாள நடிகரான இவரின் படம் இப்போதெல்லாம் வெளியாகிறது என்றால், இவரின் நடிப்பை பார்ப்பதற்காகவே திரையரங்கங்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின்றன. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்கள் அனைத்திலும், தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார் ஃபகத்.
சமீபத்தில் இவர் நடித்த ஆவேசம் திரைப்படமானது திரையரங்குகளில் வசூலை வாரி குவித்தது. நல்ல நடிகர் என்பது மட்டுமன்றி மிகவும் யதார்த்தமான மனிதரும்கூட. சமீபத்தில் கூட, “நடிகர்களை கொண்டாடாதீர்கள். அவர்களின் நடிப்பை திரையரங்கில் இருந்து வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக விட்டுவிடுங்கள். வீடுகளிலும் நடிகர்கள் பற்றிய பேச்சு வேண்டாம்” என்ற இவரின் வெளிப்படையான கருத்து இணையத்தில் வைரலானது.
அப்படியிருக்கையில், தனக்கு 41 வயதில் ADHD (Attention-deficit / hyperactivity disorder) எனப்படும் ‘கவனக்குறைவு அல்லது அதிக செயல்பாடு கோளாறு / குறைபாடு’ இருப்பது மருத்துவரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார் ஃபகத்.
‘41 வயதில் இது ஏற்பட்டால், முழுமையாக குணமாகி மீண்டுவிட முடியுமா?’ என்று மருத்துவரிடம் தான் கேட்டதாகவும் கூறியிருக்கிறார் ஃபகத். அதற்கு பதிலளித்த மருத்துவர், “சிறு வயது குழந்தைகள் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக / விரைவாக அவர்களை குணப்படுத்திவிடலாம்” என்று கூறினாராம்.
முன்னதாக ஃபகத் ஃபாசில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 26) கேரளாவின் கொத்தமங்கலம் பகுதி அருகே உள்ள Peace Valley Children's Village என்ற குழந்தைகள் இல்லத்துக்கு நிகழ்ச்சியொன்றுக்காக சென்றிருந்தார். அங்குதான் மருத்துவரிடம் தான் இப்படி கேட்டதாக நிகழ்ச்சியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
தனது நோயறிதலைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய ஃபகத், “குழந்தை பருவத்தில் ADHD கண்டறியப்பட்டால், ADHD ஐ நிர்வகிக்க முடியும் மற்றும் மாற்றியமைக்க முடியும், பின்னர் வாழ்க்கையில் அதைக் கையாள்வது மிகவும் சவாலானது” என்று வலியுறுத்தினார்.
பொதுவாக இது பதின்ம வயதிலிருந்து முதிர் வயதுக்கு மாறிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும்.
பெரும்பாலான பதின்பருவ குழந்தைகளின் பெற்றோர்கள், “என் மகன் / மகள் உலகத்தைப்பற்றிய சிந்தனையோ அல்லது தன்னைப்பற்றிய அக்கறையோ இல்லாமல் இருக்கிறான்/ள். எதெற்கெடுத்தாலும் எரிந்து விழுவதை பார்க்க முடிகிறது அல்லது எதிலும் ஒரு ஆர்வம் இல்லாமல் இருக்கிறான்/ள்” என்பார்கள். இப்படி உள்ள குழந்தைகள் பெரும்பாலானோருக்கு ADHD இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. 6 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளில் ஆறில் ஒருவருக்கு ADHD-யின் தாக்கம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு நிலையான பயம், பதற்றம் மற்றும் அதிக இதயத்துடிப்பு, சோர்வு, தூக்கமின்மை மற்றும் தூக்கக் கலக்கம், திடீரென கோபமடைவது ஆகியவை இருக்கலாம். அப்படி இருந்தால், அக்குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதிக்க வேண்டும். உறுதிசெய்யும் பட்சத்தில், உரிய மருத்துவ வழிகாட்டுதலின்படி அவர்களை நம்மால் மேம்படுத்த முடியும். இது நோயல்ல. நரம்பு தொடர்பாக ஏற்படும் ஒருவகை மாற்றம் மட்டுமே. உரிய மருத்துவ வழிகாட்டுதலின்படி, இதை கட்டுப்படுத்த முடியும்.