நடிகர் போண்டா மணியின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் பல திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்த இவர், படப்பிடிப்பு ஒன்றின் போது சாக்கடை நீரில் விழுந்ததாகவும், அந்த நீர் நுரையீரலில் தங்கியதால் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த பின் இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் போண்டா மணிக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான உதவிகளை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் போண்டா மணி. இதுபற்றி அவருடன் நடித்த நடிகரும், நண்பருமான பெஞ்சமின் வெளியிட்ட உருக்கமான வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் போண்டாமணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, மருத்துவர்களிடம் சிகிச்சைக் குறித்துக் கேட்டறிந்தார். இதையடுத்து "சிகிச்சைக்கான செலவு முழுவதையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஏற்கும்" என நடிகர் போண்டா மணியிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதியளித்தார்.