நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், ’செக்ஸ் எஜுகேஷன்’ (Sex Education) என்ற பாலியல் கல்வி குறித்த தொடரை (series) விளம்பரப்படுத்த நெட்ஃப்ளிக்ஸுடன் இணைந்து நகைச்சுவை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாலியல் மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட விவாதங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் தொடர் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பாலியல் கல்வி குறித்து பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் பேசுவதே தவறானது என்ற எண்ணத்தையும் தயக்கத்தைம் களையுமாறு இந்த வீடியோவில் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார். 7 நிமிடங்கள் வரும் அந்த வீடியோ, பாக்யராஜ் தனது வயது நண்பர்கள் இருவரை சந்திக்கும்போது நடக்கும் உரையாடலை மையமாகக் கொண்டுள்ளது. அதில், ஒரு நண்பர் தனது 25 வயது மகனின் பையில் ஆணுறை இருப்பதைப் பார்த்ததாக வருத்தத்துடன் கூறுகிறார். அதற்கு பாக்யராஜ், மது அருந்தாமல் இருக்க அறிவுறுத்துவதைவிட பாதுகாப்பான பாலியல் பழக்கங்களை புகுத்துவது முக்கியம் என்று கூறுகிறார்.
தொடர்ந்து, பெற்றோர்கள் செக்ஸ் என்ற வார்த்தையையே எவ்வாறு தவிர்க்கிறார்கள் என்பதையும், தங்கள் குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்குவதைவிட, அதைப்பற்றி பேசுவதற்கே மறைமுகமான வார்த்தைகளை பயன்படுத்துவதை எதிர்க்கும் அவர், பாலியல் கல்வி குறித்து குழந்தைகளிடம் வெளிப்படையாக பேசுமாறும் அறிவுறுத்துகிறார்.
தற்போது இண்டெர்நெட்டை கையிலேயே கொண்டு இயங்குகின்ற குழந்தைகளிடம் பாலியல் மற்றும் பாலுறவு குறித்து எப்போது எவ்வாறு பேசவேண்டும் என்று விளக்கும் அவர், STD என்று சொல்லக்கூடிய பால்வினை நோய்கள் (Sexually Transmitted Diseases) குறித்து குழந்தைகளுக்கு தெரியாமல் போவதும் பெற்றோர்களின் தவறுதான் என்கிறார். மேலும், ’செக்ஸ் எஜுகேஷன்’ என்ற நெட்ஃப்ளிக்ஸ் தொடரானது நாம் விவாதத்துக்குரியதாக பார்க்கும் பாலியல் தொடர்பான விஷயங்களை பொழுதுபோக்காக தருகிறது. எனவே இந்தத் தொடரை பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் பார்க்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.