பாக்யராஜ் நடித்துள்ள 3.6.9 படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு, லட்சுமி ராமகிருஷ்ணன், சுப்ரமணியம் சிவா, பாண்டியராஜன், இசையமைப்பாளர் தீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
81 நிமிடத்தில் மல்டி கேமரா செட்டப்பில் எடுத்து முடிக்கப்பட்ட படம் என்ற வித்தியாசமான முயற்சியை இந்தப் படக்குழு செய்துள்ளது. நிகழ்வில் பேசிய பாக்யராஜ் “சில விஷயங்களில் நான் பிடிவாதமாக இருப்பேன். கைதியின் டைரியை படமாக்கிய போது பாரதிராஜா சார் நான் எழுதிய க்ளைமாக்ஸை வைக்கவில்லை. அதுவே நான் அந்தப் படத்தை இந்தியில் ஆக்ரி ரஸ்த்தா என ரீமேக் செய்த போது நான் எழுதிய க்ளைமாக்ஸ் வர வேண்டும் என நினைத்தேன். தயாரிப்பாளர், கேமராமேன், சண்டைப் பயிற்சியாளர் உட்பட பலரும் கைதியின் டைரி க்ளைமாக்ஸையே எடுக்கலாம் என சஜஷனாக சொன்னார்கள்.
எனவே அமிதாப்பிடம் மட்டும் நான் என்ன செய்யட்டும் எனக் கேட்டேன். அப்போது அவர் எனக்கும் அந்த க்ளைமாக்ஸ் தான் பிடித்திருந்தது. ஆனால் நீங்கள் இப்போது நினைத்திருக்கும் க்ளைமாக்ஸ் என்ன என்று எனக்குத் தெரியாது. பிறகு எப்படி நான் ஒப்பிடுவது. எனவே நீங்கள் நினைப்பதை எடுங்கள் என்றார். படம் ரெடியானதும் என்னுடைய க்ளைமாக்ஸை அனைவரும் பாராட்டினார்கள். பாரதிராஜாவும் கூட இந்த க்ளைமாக்ஸை மிஸ் செய்துவிட்டேனே என சொன்னார். எனவே சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பது நல்லது.
அதே போல் தான் இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இந்தப் படத்துக்காக பல விஷயங்களில் பிடிவாதமாக இருந்திருக்கிறார்கள். படத்திற்கு வரும் அத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். படத்தில் என்னுடைய வேலை ஒரு நாள் தான் என்றாலும், அதற்கான முன் தயாரிப்புகள், உரையாடல்கள் எனப் பலவும் நடைபெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் கவனிக்கப்படும் என நம்புகிறேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து 3.6.9 படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.