திரையரங்க கட்டணங்களை தமிழக அரசு மாற்றியமைத்துள்ள நிலையில், நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இன்று கூடுகிறது.
சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முன்னணி நடிகர், நடிகையர் மற்றும் நாடக சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் கடந்தாண்டுக்கான வரவு செலவு அறிக்கை மற்றும் எதிர்காலத் திட்டமிடல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
30 சதவிகிதமாக இருந்த கேளிக்கை வரியை 10 சதவிகிதமாக தமிழக அரசு குறைத்தபோதிலும் அதனை முற்றிலுமாக நீக்க திரைத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் திரையரங்க கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்க பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.