நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘விஸ்வாசம்’ திரைப்படம், இந்தயில் ரீமேக் செய்யப்பட உள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சமீப காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள், இந்தியில் அதிகளவில் ரீமேக் செய்யப்படுகின்றன. இதற்கு காரணம், தென்னிந்திய திரைப்படங்களுக்கு வட இந்தியாவில் நிலவும் ரசிகர்களின் ஆதரவும், நடிகர்களின் ஆர்வமும் முக்கியமாக உள்ளன. விஜயின் ‘மாஸ்டர்’, விஜய்சேதுபதியின்‘விக்ரம் வேதா’, சூர்யாவின் ‘சூரரைப்போற்று’, கார்த்தியின் ‘கைதி’, விஷ்ணு விஷாலின்‘ராட்சசன்’, அருண்விஜயின் ‘தடம்’, சந்தீப் கிஷனின்‘மாநகரம்’ உள்ளிட்டப் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன.
அந்தவகையில், சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்து, மாபெரும் வெற்றிபெற்ற ‘விஸ்வாசம்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னுடைய மகளை பிரிந்து வாழும் அஜித், பின்னர் மகளின் கனவை அடைவதற்காக அவருக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மணீஷ் ஷாவின் கோல்ட்மைன் டெலிபிலிம்ஸ், ‘விஸ்வாசம்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ரூ. 4 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நட்சத்திரங்களான அஜய்தேவ்கன் மற்றும் அக்ஷய்குமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும், இந்தி பார்வையாளர்களுக்கு ஏற்றதாக இந்தப்படம் இல்லை என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்தியில் ரீமேக் செய்யப்படும் ‘விஸ்வாசம்’படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் இரண்டாவது முறையாக நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படம் தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் ஆனது. அதேபோல், அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வேதாளம்’ படம் தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. போலா சங்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.