தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் ‘வலிமை’ திரைப்பட காட்சிகளுக்கான முன்பதிவு ஜப்பான் நாட்டின் திரையரங்குகளில் துவங்கியுள்ளது.
ஹெச் வினோத்குமார் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு, இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்கலை முன்னிட்டு ‘வலிமை’ படம் திரையரங்குகளில் வெளிவர இருந்தநிலையில், கொரோனா இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், ‘வலிமை’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில், வரும் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு படக்குழு அறிவித்தது.
இந்தியாவில் ‘வலிமை’ திரைப்பட காட்சிகளுக்கான முன்பதிவு துவங்காதநிலையில், ஜப்பான் நாட்டின் திரையரங்குகளில் இந்தப் படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் அஜித் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘வலிமை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிகர் அஜித் நடித்துள்ளார். அவருடன் கார்த்திகேயா, ஹீமா குரோஷி, யோகி பாபு, சுமித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்தப் படத்தின் ட்ரெயிலர், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.