”நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம்” என நடிகர் அமீர்கானும் அவரது மனைவி கிரண் ராவ்வும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான், அவரது மனைவி இயக்குநர் கிரண் ராவ் இருவரும் விவாகரத்து செய்துள்ளதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். நடிகர் அமீர்கானுக்கு இரண்டு மனைவிகள். கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதல் திருமணம் செய்தவர், கடந்த 2002 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியாகி 7 தேசிய விருதுகளையும் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘லகான்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரண் ராவை இரண்டாவதாக கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கிரண் ராவ் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான ’டோபி காட்’ படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவைச் சேர்ந்த, இவர் ‘செக்க சிவந்த வானம்’ ஹீரோயின் அதிதி ராவ்வின் உறவினர் என்பது கூடுதல் தகவல்.
இந்த நிலையில், 16 ஆண்டுகால காதல் வாழ்க்கைக்குப் பிறகு இந்தத் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர். அந்த அறிக்கையில், “இந்த 15 ஆண்டுகால உறவில் எங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டோம். எங்கள் உறவு அன்பு, மரியாதை,நம்பிக்கை ஆகியவற்றால் மட்டுமே வளர்ந்துள்ளது. இப்போது எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க விரும்புகிறோம். ஆனால், கணவன் மனைவியாக அல்ல. இனி தனித்தனியாக வாழ்ந்தாலும் குழந்தைக்கு இணை பெற்றோர்களாக குடும்பமாக இருப்போம். மகன் ஆசாத்துக்கு நல்ல பெற்றோர்களாக இருப்போம். அதேபோல, திரைப்படங்களில் நாங்கள் விரும்பினால் தொடர்ந்து பணியாற்றுவோம். இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல. புதிய பயணத்தின் தொடக்கமாக காண்பீர்கள்” என்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். நடிகர் அமீர்கானுக்கு முதல் மனைவி ரீனா தத்தாவுடன் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.