’டாணாக்காரன்’ படத்திற்காக விக்ரம் பிரபுவை போனில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
முழுக்க முழுக்க காவலர் பயிற்சிப் பள்ளியைக் கதைக்களமாகக் கொண்டு அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ள 'டாணாக்காரன்' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கடந்த 8 ஆம் தேதி வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், லால், எம்.எஸ். பாஸ்கர், மதுசூதன ராவ், அஞ்சலி நாயர், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காவலர் பயிற்சிப் பள்ளியில் இருப்போருக்கு கொடுக்கப்படும் கடுமையான பயிற்சிகள், அதிகாரிகளின் கண்டிப்பு, அதில் உள்ள குரோதம் உள்ளிட்டவற்றை இயக்குநர் தமிழ் கதையாக்கி படமாக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு உயிரூட்டியது.
ஏற்கனவே, பொதுமக்களும் திரைத்துறையினரும் பாராட்டிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை போனில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். இதனை விக்ரம் பிரபு உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து டாணாக்காரனில் எனது நடிப்பிற்காக பாராட்டியது அற்புதமான நிகழ்வு. கனவில் கூட நினைக்காத அளவுக்கு சாதித்ததுபோல் உள்ளது. நம்முடைய கனவுகளுக்கான முயற்சியில் இறங்கும்போது இப்படி அதிசயமான நிகழ்வுகள் நடக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார். விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்ததாக, ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘டைகர்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவுள்ளன.