தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படத்தின் கதை நிகழ்வாண்டு 90 களின் பிற்பகுதி என்று மாற்றப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கர்ணன்’ படம் கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சம்பவம் 1997 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் நடப்பதுபோல் காட்டப்பட்டுள்ளதாக படம் பார்த்தவர்கள் தொடர்ச்சியாக விமர்சனம் வைத்து வந்தார்கள். அதாவது படத்தில் 1997ம் ஆண்டிற்கு முன் பகுதியில் என்று போட்டிருப்பார்கள்.
’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியதோடு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’கர்ணன்’ படத்தில் அச்சம்பவம் 1997-ல் திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளதை மாற்றக்கோரி தயாரிப்பாளர் தாணுவிடமும் இயக்குநர் மாரி செல்வராஜிடமும் கோரிக்கை வைத்தார்.
அவர்களும் இரண்டு நாட்களில் சரி செய்வதாக கூறியிருந்தார்கள். இந்நிலையில்தான், கர்ணன் படத்தின் கதை நிகழும் ஆண்டு 90 -களின் பிற்பகுதி என்று இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.