அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதால், அந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டுவருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை படக்குழு மறுத்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ கிளாசிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல்தான் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’. இந்தப் படத்தில் கரீனா கபூர், மோனா சிங், நாகசைதன்யா ஆகியோ நடித்திருந்தனர். பிரபல நடிகர் அதுல்குல்கர்னி திரைக்கதை அமைக்க, அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தை வையாகாம் 18 தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, அமீர்கான் தயாரித்திருந்தார். 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் சுமார் 20 வருட போராட்டங்களுக்குப் பிறகு நேற்று வெளியானது. ஆனால் இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப்படம், கடந்த 5 நாட்களில் 45 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. விடுமுறை நாட்களில் கூட இந்தப் படம் வசூலிக்காததாது பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் அடுத்ததாக ஷாரூக்கானின் ‘பதான்’ மற்றும் ஹிர்த்திக் ரோஷனின் ‘விக்ரம் வேதா’ படங்களை புறக்கணிக்குமாறு பாலிவுட் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘லால் சிங் சத்தா’ படத்தின் மிகப்பெரிய தோல்வியால், அப்படத்தின் விநியோகிஸ்தர்கள் பெருமளவான நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், இதனால் நஷ்ட ஈடு கேட்டு அமீர்கான் மற்றும் வையாகாம் 18 தயாரிப்பு நிறுவனத்தை அணுகியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த வதந்திகளை வையாகாம் 18 தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. அஜித் அந்த்ரே கூறுகையில், இது ஆதாரமற்ற ஊகங்கள் என்றும், எந்தவொரு விநியோகஸ்தர்களும் அவ்வாறு எங்களது தயாரிப்பு நிறுவனங்களை அணுகவில்லை என்றும், தற்போதும் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ‘லால் சிங் சத்தா’ படம் ஓடிக்கொண்டிருப்பதால் அதற்கான அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.