பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் 8,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டங்கல் படம் சீனாவில் 9000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மல்யுத்த வீரரான மகாவீர் சிங் பகாட், தனது மகள்களை மல்யுத்த சாம்பியனாக உருவாக்கிய உண்மை கதையை மையமாக கொண்டு ஆமீர் கானின் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியான படம் ”டங்கல்”. இந்த படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் 4,300 திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, இந்த படம் தற்போது சீனாவில் உள்ள 9000 திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படம் வெளியான ஒரே நாளில் 15 கோடி ரூபாய் வசூல் செய்தது என இந்திய பாக்ஸ் ஆபிஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஆமிர் கானின் படமான PK திரைப்படம் 4000 திரையரங்குகளில் வெளியாகி சுமார் 100 கோடி வசூல் செய்தது. இந்த வசூலை டங்கல் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீசான திரையரங்குகள் எண்ணிக்கையில் பாகுபலியை விட டங்கல் அதிகம் என்றாலும் வசூலில் மிஞ்சுவது கடினம்தான்.