பாலிவுட் முன்னணி நடிகர் ஆமிர்கான், தற்போது உருவாகிவரும் ‘லால் சிங் சத்தா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக துருக்கி சென்றார். அங்கு அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுக்க கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முண்டியத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாம் ஹாங்ஸ் நடித்து 1994 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம், 'பாரஸ்ட் கெம்ப்' (Forrest Gump). ராபர் ஜெமெக்ஸ் இயக்கியிருந்தார். ஆஸ்கர் விருதைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ள ஆமிர்கான், 'லால் சிங் சத்தா’ (Laal Singh Chadda) என்ற பெயரில் உருவாக்குகிறார். அதை அத்வைத் சந்தன் இயக்கிவருகிறார்.
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு சில நாட்கள் தடைபட்டிருந்த நிலையில், மீண்டும் சுறுசுறுப்பாக பணிகள் தொடங்கியுள்ளன. படத்தின் மீதமுள்ள பகுதிகளைப் படம்பிடிக்க படக்குழுவினர் துருக்கி சென்றனர். அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செல்ஃபி எடுப்பதற்காக ஆமிர்கானை ரசிகர்கள் சூழ்ந்துகொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையாகியுள்ளது.