கவனம் ஈர்த்துள்ள ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடலுக்கு இரண்டு கைகளும் போலியோவால் பாதித்த இளம் பெண் ஒருவர் அதேபோல் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
இப்படாலின், முதல் பாடலான ‘நட்பு’ பாடல் வெளியான நிலையில், இந்த வாரம் ‘நாட்டு கூத்து’ பாடல் வெளியானது. உக்ரைனில் எடுக்கப்பட்ட இப்பாடலின் நடனம்தான் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கீரவாணி இசையில் இப்பாடலுக்கு தெலுங்கு நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார்.
தெலுங்கில் ராம் சரணும் ஜுனியர் என்.டி.ஆரும் ‘நாட்டு நாட்டு’ என்று செம்ம துள்ளலுடன் தோள்களை ஒன்றாகப் பிடித்துக்கொண்டு நடனம் ஆடுவது பார்க்கும் நம்மையும் எனர்ஜியூட்டுகிறது. வெளியான ஒரே நாளிலேயே 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த இப்பாடல் தமிழிலும் ‘நாட்டு கூத்து’ பெயரில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த போலியோவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது இரண்டு கைகள் இல்லாமலேயே இப்பாடலுக்கு தன்னம்பிக்கையுடன் கால்களாலேயே உற்சாகமுடன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.