இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கி வருகிறார். சமீபத்தில், விவசாயப் போராட்டம் குறித்து பேசியிருந்ததுகூட சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பாஜகவே அவரைக் கண்டித்திருந்தது. இதுதொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து கங்கனா விளக்கம் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், கங்கனாவைச் சுற்றி அடுத்த பிரச்னை ஆரம்பமாகி உள்ளது. அவருடைய நடிப்பிலும் இயக்கத்திலும் உருவாகியிருக்கும் படம், ‘எமர்ஜென்சி’. இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், அவர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில், அவர் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாா். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முன்னதாக, இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்தச் சூழலில், எமர்ஜென்சி படத்தில் சீக்கியா்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், சீக்கிய அமைப்பினா் தடை விதிக்கக் கோரியுள்ளனா். இது தொடர்பாக சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் பரம்ஜித் சிங் சர்னா, மத்திய சென்சார் போர்டு தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், ‘எமர்ஜென்சி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், படத்தின் வெளியீட்டைத் தடை செய்யக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றங்களில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. மறுபுறம், ’எமர்ஜென்சி’ திரைப்படத்தை தெலங்கனா மாநிலத்தில் வெளியிடத் தடை செய்வது குறித்து அம்மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ” ‘எமர்ஜென்சி’ படத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக, படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் படமான ’எமர்ஜென்சி’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டதாக வதந்திகள் பரவிவருகின்றன. இது உண்மையல்ல. உண்மையில், எங்கள் படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது, ஆனால் பல அச்சுறுத்தல்கள் வந்ததால்தான் சான்றிதழ் அளிக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் வருகின்றன. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் காட்ட வேண்டாம் என்றும், பிந்த்ரன்வாலேவைக் காட்ட வேண்டாம் என்றும், பஞ்சாப் கலவரத்தைக் காட்ட வேண்டாம் என்றும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அப்படிச் செய்தால் படத்தில் காட்ட என்ன எஞ்சியிருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாட்டின் நிலைமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ”படத்தின் சான்றிதழ் பரிசீலனையில் உள்ளது. அது தற்போதுவரை வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி சான்றிதழ் வழங்கப்படும். யாருக்காவது ஏதேனும் குறைகள் இருந்தால், அதை வாரியத்திற்கு அனுப்பலாம். எந்தவொரு படத்திற்கும் சான்றிதழ் வழங்குவதற்கு முன், அனைத்து அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மதம் அல்லது வேறு எந்தக் குழுவின் உணர்வுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யப்படும்’ என CBFC பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, ’எமர்ஜென்சி’ படத்தின் திரையிடல் சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.