ஒளியிலே மறைந்த இளையராஜா வீட்டு இளவரசி; தூரமாய்ச் சென்ற ‘பவதா’ எனும் பவதாரிணியின் நினைவலைகள்!

’இசைஞானி இளையராஜா வீட்டு இளவரசி’ என அழைக்கப்படும் பவதாரிணி, இன்று நம்முடன் இல்லை எனச் செய்தி கிடைத்திருப்பது எண்ணற்ற ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
பவதாரிணி
பவதாரிணிட்விட்டர்
Published on

தமிழ் இசை உலகில் தனித்துவமாகத் தெரிந்த குரல்!

’இசைஞானி இளையராஜா வீட்டு இளவரசி’ என அழைக்கப்படும் பவதாரிணி, இன்று நம்முடன் இல்லை எனச் செய்தி கிடைத்திருப்பது எண்ணற்ற ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இசைக்கு மொழிகள் கிடையாது; ஆனால் மயக்கும் சக்தி உடையது. எப்படிப்பட்ட உயிர்களும் இசைக்கு அடிமையாகிவிடும். அதிலும் ஒரு சில இசை மற்றும் ஒரு சில பாடகர்களின் குரல் என்றால், சொல்லவே வேண்டியதில்லை. அவர்களுடைய இசை வெள்ளத்தில் மட்டுமே நனைந்துகொண்டிருப்பர். அப்படியான ஓர் இசைக்குயில்தான் இன்று, நம்மை எல்லோரையும் தவிக்கவைத்துவிட்டுச் சென்றிருக்கிறது.

அதிலும் பவதாரிணி என்ற குரல், தமிழ் இசை உலகில் தனித்துவமாகத் தெரியும். எல்லோராலும் அவருடைய குரலை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். உதாரணத்திற்கு, பாடல் ஒன்றை ஒலிபரப்பவிட்டு, ’இதை யார் பாடியது’ எனக் கேள்வி வைத்தோமென்றால் எல்லோரும் சரியான பதிலைச் சொல்வது என்பது சற்றுக் கடினம்தான். ஆனால், இசைக்குயிலாகச் சிறகடித்த பவதாரிணியின் குரலை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்பதுதான் எல்லோரும் சொல்லும் விஷயம்.

‘உன் குரல் நன்றாக இருக்கிறது’ - ஊக்கப்படுத்திய உறவுகள்

அந்த அளவுக்கு தமிழ்த் திரையுலகில் வித்தியாசமாய் ஒலித்த குரல் அவருடையது. இசைக்குடும்பத்திலிருந்து அவர் வந்ததால், சிறுவயதிலேயே அவரது ஆர்வமும் இசைமீதே இருந்தது. மார்கழி மாதத்தின்போது திருப்பாவை வரும்போதெல்லாம், விடியற்காலையில் 4.30 மணிக்கே எழுந்து பூஜையறையில் குருநாதர்களுடன் பாடியவர் இந்தக் குயில். இப்படி அவர் சிறுவயது முதலே இசையிலேயே தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில், அவரது வீட்டில் ஆண்டுதோறும் கொழு நடைபெறும்வேளையில், முதல் நாளன்று பாட ஆரம்பித்துவிடுவாராம் பவதாரிணி. அவரது, குரலைக் கேட்கும் அங்குள்ளவர்கள், ‘உன் குரல் நன்றாக இருக்கிறது; தனியாகத் தெரிகிறது. நீ இன்னும் பயிற்சி எடுத்தால் சிறப்பாகப் பாடுவாய்’ என ஊக்கப்படுத்தி உள்ளனர். அந்த ஊக்கத்தாலேயும் உற்சாகத்தாலேயுமே பின்னாட்களில் அவர் பயிற்சி எடுத்ததற்குப் பிறகு ‘பாரதி’ படத்தில் தேசிய விருது வாங்கும் அளவுக்கு முன்னேறினார்.

அது மட்டுமின்றி, அந்த விருதுக்கு முன்பும்பின்பும் அவரது குரலில் இருந்து அற்புதமான பாடல்கள் வெளிவந்தன. ’ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடல் மூலம் இன்றும் இளையோரை, இசை சங்கமத்தில் மூழ்கவைத்துவிடுகிறது, அவரது குரல். இன்னும் சொல்லப்போனால், ‘தாலியே தேவையில்லை’ எனப் பாடியதன்மூலம் தலைமுறை சிறுசுகளையும் தாலாட்டிக்குள் தாகம்கொள்ள வைத்தார்.

”அப்பா இசையில் பாடும்போதெல்லாம் பயமாகத்தான் இருக்கும்”!

ஆயினும் இப்படி அழகான, அற்புதமான பாடல்களைப் பாடிய பவதாரிணிக்கு, அவருடைய அப்பா இசையில் பாடும்போதெல்லாம் பயமாகத்தான் இருக்குமாம். காரணம், ’என்ன மாதிரியான பாடல் தரப்போகிறார்கள்’ எனத் தெரியாதாம். ரிக்கார்டிங் தியேட்டர்போனால்தான் தெரிய வருமாம். அதுவரை ஒரே பரபரப்பாகத்தான் இருக்கும் என அப்பா இசையில் பாடுவது குறித்து முன்னமே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் பவதாரிணி.

சிறுவயதிலேயே அவர் தந்தையின் இசையில் வெளிவந்த ’என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் இடம்பெற்ற ’குயிலே.. குயிலே குயிலக்கா’ என்ற பாடலைத்தான் முதலில் பாடியதாகவும், அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். எப்போதும் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வலம்வந்த பவதாரிணி, தன் தந்தை கண்டிப்பானவர் இல்லை எனவும், அதேநேரத்தில் அவர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர் எனவும் தெரிவித்துள்ளார்.

தூரமாய்ச் சென்ற ‘பவதா’ எனும் பவதாரிணி

ஒருமுறை தன் தந்தையிடம் பியானோ வாசித்துக் காண்பித்துள்ளார் பவதாரிணி. அதைப் பார்த்து இசைஞானி ஆச்சர்யப்பட்டதுடன், ‘ஹே இது நல்லா இருக்கு’ என மனந்திறந்து பாராட்டினாராம். அதுபோல் இன்னொரு முறை, தாம் இசையமைத்த படத்திற்கான பாடலைக் காண்பித்து உள்ளார். அதையும் கேட்ட இளையராஜா, ‘இந்த டியூனும் நன்றாக இருக்கிறது’ எனப் பாராட்டினாராம். இப்படி, அப்பாவிடம் பலமுறை பாராட்டுகளைப் பெற்ற அந்த இசைக்குயில் தம்மைத் தேடி வந்த இயக்குநர்களின் சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய பேட்டிகளில் ஒவ்வொரு இரண்டு வார்த்தைகளுக்கும் புன்னகையே அதிகம் தவழுவதை நாம் பார்க்க முடியும். அந்த அளவுக்கு குரலால் மட்டுமல்ல, முகத்தாலும் அனைவரையும் வசீகரித்தவர், பவதாரிணி. அவர்களுடைய வீட்டு உறவுகள் மூலம் ‘பவதா’ எனச் செல்லமாய் அழைக்கப்பட்ட பவதாரிணி, இன்று நம்மைவிட்டுத் தூரமாய்ச் சென்றுள்ளார், அவருடைய பாடல்களை மட்டும் நெஞ்சில் நிறுத்திவிட்டு...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com