’இசைஞானி இளையராஜா வீட்டு இளவரசி’ என அழைக்கப்படும் பவதாரிணி, இன்று நம்முடன் இல்லை எனச் செய்தி கிடைத்திருப்பது எண்ணற்ற ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 47 வயதான பவதாரிணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இலங்கையில் காலமானார். அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவருடைய திரைவாழ்வை நாம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.
பெரிய இசைக் குடும்பத்தில் இருந்து அவர் வந்திருந்தாலும், சிறு வயதிலிருந்தே இசைக்குள் மூழ்கியவர். அப்பா இளையராஜாவோடு மட்டுமல்ல, அண்ணன் கார்த்திக் ராஜா, தம்பி யுவன் சங்கர் ராஜோவோடும் கைகோர்த்து நடந்தவர். குடும்பத்தின் செல்லப்பிள்ளையாகக் கூடிநின்று கொண்டாடப்பட்டவர். வீட்டில் வைக்கப்படும் கொழுவில் கலந்துகொண்டு மழலை மொழியில் பாடிவந்த ’பவதா’ எனும் பவதாரிணி, பின்னாளில் திரைக்குள்ளும் வந்து புதிய சகாப்தம் படைத்தார்.
அப்பா இளையராஜா இசையில் வெளிவந்த ‘ராசய்யா’ படத்தில் இடம்பெற்ற ’மஸ்தானா.. மஸ்தானா’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி. அந்த ஒருபாடலே உலகத்தில் உள்ள அனைத்து மூலைகளுக்கும் அவரை அழைத்துச் சென்றது. அவருடைய இந்தப் பாடலில் ஒரு குழந்தைத்தனமும் வசீகரமும் இருந்தது. அதனாலேயே இந்தப் பாடல் கவனம் பெற்றது; பவதாரிணியின் குரலைக் கவனிக்க வைத்தது.
அதற்குப் பிறகு இவருடைய குரலில் வெளிவந்த அனைத்துப் பாடல்களும் தேனும்பாலும் கலந்த பழரசமாக ரசிகர்களிடம் இனிக்க ஆரம்பித்தன. ஒருகட்டத்தில் அவருடைய குரலில் இருந்து, மேலும் பல பாடல்கள் வராதா என ரசிகர்கள் ஏங்கினர். அவருடைய குரலில் இனித்த, ‘என் வீட்டு ஜன்னல் எட்டி’ எனும் பாடல் இன்னும் பல வீட்டு ஜன்னல் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. ’இது சங்கீதத் திருநாளோ” எனும் பாடலைக் கேட்கும்போது எங்கும் திருநாளாகவே இருக்கிறது.
’ஒரு சின்னமணிக் குயிலு’ பாடல் சிறுசுகளை வசீகரித்துக் கொள்கிறது. ’ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடல் இன்றும் இளையோரை, மயக்கம் கொள்ளவைக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ‘தாலியே தேவையில்லை’ பாடல், தலைமுறை சிறுசுகளையும் தாகம் கொள்ளவைக்கிறது. இப்படி, பல பாடல்களால் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு நீங்கா இடம்பிடித்த பவதாரிணி, ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருதையும் அள்ளினார். அந்த விருதுக்குப் பிறகும் அவரது குரலில் இருந்து அற்புதமான பாடல்கள் வெளிவந்தன.
இப்படி, பல பாடல்களைப் பாடியிருக்கும் பவதாரிணி, அப்பா இளையராஜாவிடம் பாடும்போது மட்டும் சற்று பயம் இருந்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால், அதே அப்பாவிடம் தன்னுடைய இசையை வாசித்துக் காண்பித்து பாராட்டும் பெற்றிருக்கிறார். அவருடைய வாழ்த்தும் ஊக்கமும்தான் அந்த இசைக்குயிலை மேலும் ’இசையமைப்பாளர்’ என்ற உச்ச ஸ்தானத்திற்கும் அழைத்துச் சென்றது. தம்மைத் தேடிவந்த இயக்குநர்களின் சில படங்களுக்கும் பவதாரிணி இசையமைத்தார். ’மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், ’அமிர்தம்’, ’இலக்கணம்’, ’மாயநதி’ உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இப்படி இறுதிவரை இசைக்காக வாழ்ந்துகொண்டிருந்த பவதாரிணி, இசையைத் தவிர, வேறு எதுவும் தெரியாது என உயிர்மூச்சாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் அவருடைய திடீர் மரணம் எல்லோரையும் பேசவைத்திருக்கிறது. இல்லையில்லை, பேசமுடியாத அளவுக்குக் கண்கலங்க வைத்திருக்கிறது. அவருடைய மறைவுக்கு எல்லோரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், திமுக எம்.பி கனிமொழியும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” 'அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார்கள். பவதாரிணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்தக் கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன்” என அந்தப் பாடலை பகிர்ந்திருந்தார்.
’வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் இன்னும் குறையல’ என ‘படையப்பா’ படத்தில் வரும் வசனம்போல் அவருடைய குரலும், கனிமொழி பகிர்ந்திருக்கும் பாடலிலும் அப்படியே இன்னும் இளமையாகவே இருக்கிறது; திரும்பத்திரும்ப கேட்கும்படியாகவே இருக்கிறது. இசைக்குயிலாகச் சிறகடித்த பவதாரிணியின் குரலை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்பதற்கு இது, இன்னொரு உதாரணம். அப்படிப்பட்ட பவதாரிணி, குரலால் மட்டுமல்ல, முகத்தாலும் அனைவரையும் வசீகரித்தவர். அந்த பவதாரிணிதான் இன்று நம்மைவிட்டுத் தூரமாய்ச் சென்றுள்ளார், அவருடைய பாடல்களை மட்டும் நம் நெஞ்சில் நிறுத்திவிட்டு!