நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் '800' என்ற திரைப்படத்தில் நடிக்கவிருந்த விஜய் சேதுபதி, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக விலகினார். இந்நிலையில், ரித்திக் என்ற பெயரிலான டிவிட்டர் பக்கத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், விஜய் சேதுபதிக்கு எதிராகவும் கருத்து பதிவிட்ட நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மிரட்டல் விடுத்த நபரின் டிவிட்டர் ஐ.பி. முகவரியை கொண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் காவல் துறையினர் விசாரணையை முடுக்கினர். அப்போது, இலங்கையிலிருந்து அந்த டிவிட்டர் ID இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இலங்கையில் விசாரணை நடத்துவதற்காக இண்டர்போலின் உதவியை நாடும் முயற்சியில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசுக்கு முறைப்படியான கடிதத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.