ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘யுத்த சத்தம்’ படத்திற்குப் பிறகு கெளதம் கார்த்திக் ‘பத்து தல’ படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் பர்பிள் ஃபுல் எண்டெர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்கும் என்.எஸ் பொன்குமார் இயக்குநர் முருகதாஸிடம் நீண்ட காலமாக இணை இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
வரலாற்றுப் படமாக உருவாகும் இப்படத்தில் ரேவதி நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்திய சுதந்திரத்தின் உச்சக்கட்டத்தின்போது, ஒரு கிராமத்தில் ஒரு துணிச்சலான வீரன் பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அழகிய பகுதிகளில் படமாக்கப்படும் இந்தப் படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது, தற்போது இப்படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் நடைபெற்றுவருகிறது. படம் குறித்து தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில்,
“‘1947- ஆகஸ்ட் 16” இதயத்தை தொடும் ஒரு நேர்மையான கதை. மனதை அசைத்து பார்க்கும் அற்புதமான படைப்பு, இந்த கதையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கதையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை நீங்கள் ஒருமுறை பார்த்தால் என்றென்றும் அது உங்கள் மனதில் நிலைத்து இருக்கும்.” என்றார். அவரைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் பொன்குமார்,
“இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்னைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.