லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ”லியோ” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றநிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தவிருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு லியோ படத்தின் வெற்றிவிழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும், விஜய் சொல்லும் குட்டிக்கதைக்காக அனைத்து ரசிகர்களும் அதிக எதிர்ப்பார்ப்போடு காத்துக்கொண்டிருந்தனர். லியோ படத்தின் பாடலுக்கும், படத்தில் வைக்கப்பட்ட வசனத்துக்கும் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதற்கெல்லாம் விஜய் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்புகளும் எகிறியது. இந்நிலையில் அனைத்து ரசிகர்களும் காத்துக்கிடந்த குட்டிக்கதையை விஜய் பேசியுள்ளார். இந்தக்கதை மூலம் படத்திற்கு முன்னாள் எழுந்த விமர்சனங்களுக்கும், படத்திற்கு பிறகான விமர்சனங்களுக்கும் பதிலளித்து பேசியுள்ளார் நடிகர் விஜய்.
குட்டிக்கதையை கூறிய விஜய், “ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு சென்றனர். அந்த காட்டில் யானை, மயில் இந்த காக்கா, கழுகு ....என்று கூறியவுடன் அரங்கமே சத்தத்தால் அதிர ஆரம்பித்தது. பின்னர் தொடர்ந்த விஜய், ”காடு என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்பதால் கூறினேன். காட்டுக்கு சென்ற இரண்டு வேட்டைக்காரர்களில் வில்-அம்பு ஒருவர் எடுத்து சென்றார், ஒருவர் ஈட்டி எடுத்து சென்றார். வில்-அம்பு எடுத்துச்சென்றவர் முயலை வேட்டையாடி எடுத்து சென்றார். ஈட்டி எடுத்து சென்றவர் யானையை வேட்டையாட நினைத்து எதுவும் இல்லாமல் வீட்டுக்கு சென்றார். இதில் யார் வெற்றிபெற்றவர்?
யானையை வேட்டையாட நினைத்தவர்தான் வெற்றியாளர். உங்கள் இலக்கை பெரிதாக வைத்து அதையை நோக்கி நாம் செல்ல வேண்டும்.. பாரதியார் சொல்வது போல் பெரிதும் பெரிது கேள்.. பெரிதாக கனவு காணுங்கள். “Small aim is crime” என கலாம் கூறியுள்ளார். எனவே பெரிதாக கனவு காணுங்கள்.” என குட்டிக்கதை மூலம் கூறியுள்ளார் விஜய்.
மேலும் பேசிய விஜய், “ஒரு பாடல் பிரச்சினை ஏற்பட்டது. விரல் இடுக்கில் தீ பந்தம் என்றால் ஏன் நீங்கள் அதை பேனாவாக நினைக்க கூடாது. இதுபோன்று ஒரு மழுப்பலான காரணம் கூறி என்னால் செல்ல முடியும். ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. சினிமாவை சினிமாவாக பாருங்கள், உலகம் முழுக்க சினிமாவை அப்படிதான் பார்க்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.