தன்னை பாதித்த புற்றுநோய் தன்னுடைய ஆசான் என்றும், அது வாழ்வின் மதிப்பை தனக்கு கற்றுத்தந்ததாகவும் திரைப்பட நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்
தமிழில், மணிரத்னம் இயக்கிய ’பம்பாய்’, ஷங்கர் இயக்கத்தில், கமலுடன் `இந்தியன்', ரஜினிகாந்த் ஜோடியாக `பாபா', அர்ஜூனுடன் `முதல்வன்', ’ஒரு மெல்லிய கோடு’, தனுஷின் ’மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்தவர், இந்தி நடிகை மனிஷா கொய்ராலா. நேபாளத்தைச் சேர்ந்த இவர் 1989-ம் ஆண்டு, நேபாள சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல மொழிகளிலும் நடித்து வந்த மனிஷாவுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் குறித்தும் அதில் இருந்து மீள்வது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் தன்னை பாதித்த புற்றுநோய் தன்னுடைய ஆசான் என்றும், அது வாழ்வின் மதிப்பை தனக்கு கற்றுத்தந்ததாக திரைப்பட நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், புற்றுநோயில் இருந்து மீண்ட பிறகு தனது குடும்பத்தை அதிகம் நேசிக்க தொடங்கியதாகவும், உடல்நலம் மீது அதிகம் கவனம் செலுத்துவதாவும் தெரிவித்தார்
புற்றுநோய் தன்னை தாக்கியது, அமெரிக்க சிகிச்சை பெற்றது, அங்கு பெற்ற அனுபவங்கள், அதில் இருந்து மீண்டு வந்தது, பின்னர் இங்கு புதிய வாழ்க்கையை தொடங்கியது என்பனவற்றை நடிகை நீலம் குமாருடன் இணைந்து ’ஹீல்டு’ என்ற புத்தகத்தில் மனிஷா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.