ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 70வது தேசிய திரைப்பட விருது கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, இயக்குநர் மணிரத்னம் இயக்கிய, ‘பொன்னியின் செல்வன் 1’ படம் தமிழில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. தவிர, இப்படம் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதையும் (ஆனந்த் கிஷ்ணமூர்த்தி) பெற்றது.
அடுத்து சிறந்த கன்னடப் படமாக ’KGF 2’ படம் தேர்வு செய்யப்பட்டது. அதுபோல், சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டார். அவர், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்ததற்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகருக்கான விருதுக்கு, நடிகர் ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டார். அவர், ‘காந்தாரா’ படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி, இன்று டெல்லியில் நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
அந்த வகையில், தமிழின் சிறந்த படமான ’பொன்னியின் செல்வன்-1 படத்திற்கான விருதை குடியரசுத் தலைவரான திரெளபதி முர்மு வழங்க அதனை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும், இதே படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. ரஹ்மான், சிறந்த பின்னணி இசைக்காக 7வது முறையாக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
அடுத்து, ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நித்யா மேனன் பெற்றுக்கொண்டார்.
இதே படத்தில் இடம்பெற்றுள்ள ‘மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே’ பாடலுக்கு சிறந்த நடன இயக்கத்துக்கான விருது ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ்க்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜானி மாஸ்டர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு விருது ரத்து செய்யப்பட்டது. இதனால் நடன இயக்குநர் சதீஷ்குமார் மட்டும் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
மேலும், மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற ‘கேஜிஎப் 2’ படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிக்கான விருதை அன்பறிவ் சகோதரர்கள் பெற்றுக்கொண்டனர். அடுத்து, ‘காந்தாரா’ திரைப்படத்தில் நடித்ததற்காக, நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறித்து இயக்குநர் மணிரத்னம், “அவர் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். முதல் படத்திலிருந்து இப்போதுவரை அவருக்கு அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்துவருவது ஆச்சர்யமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கொல்கத்தா | தொடரும் உண்ணாவிரத போராட்டம்.. 50 மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!