“’நவரசா’ திரைப்படம் சிங்கப்பூர், மலேசியா, அரசு நாடுகளில் ஓடிடி வரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ளது. உலகளவில் கொண்டாடுகிறார்கள்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசனும் இணைந்து தயாரித்த ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘நவரசா’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், படத்திற்குக் உகளவில் கிடைத்த வரவேற்பு குறித்து படத்தின் தயாரிப்பாளர்களான மணிரத்னமும் ஜெயேந்திர பஞ்சாபகேசனும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையில்,
"‘நவரசா’ தொடருக்கு கிடைத்து வரும் பெரும் வரவேற்பு, எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், எல்லைகளை கடந்து பல நாடுகளிலும் இத்தொடர் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் முதல் 10 இடத்தில் உள்ளது. இந்த நவரசத்தின் சங்கமம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. இந்த தொடருக்கான பார்வையாளர்களில் 40% பேர் இந்தியாவிற்கு வெளியிலிருந்து பார்த்தவர்களே, இத்தொடரின் உட்கருத்து தமிழில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை கவர்ந்ததில், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். முன்னனி நட்சத்திரங்கள் மற்றும் படப்பாளிகளுடன் இணைந்து உருவாக்கிய இப்படைப்பு அற்புதமான பயணமாக இருந்தது” என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.