சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெளியானது 'அண்ணாமலை' திரைப்படம். பாட்ஷாவுக்கு முன்பு ரஜினியின் கேரியரில் பிளாக் பஸ்டராக அமைந்தது இந்தப்படம். கே.பாலச்சந்தர் தயாரிப்பில் 1992-இல் வெளியான இத்திரைப்படம் குறித்து சில தகவல்கள் இங்கே.
1) இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் 1992-ஆம் ஆண்டு 3 படங்களை தயாரிக்க முடிவு செய்தது. அதில் ரஜனிகாந்தின் அண்ணாமலை படமும் ஒன்று. மற்றப்படங்கள் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா மற்றும் பாலச்சந்தர் இயக்கத்தில் வானமே எல்லை.
2) அண்ணாமலை படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது இயக்குநர் வசந்த். பின்பு என்ன நடந்ததோ தெரியவில்லை சுரேஷ் கிருண்ணா ஒப்பந்தமானார்.
3) அண்ணாமலை படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக இசையமைத்தார் தேனிசை தென்றல் தேவா. அண்ணாமலை படத்தின் அனைத்துப் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்.
4) ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என கிராபிக்ஸ் கார்டு போடப்பட்டு அசத்தலான இன்ட்ரோ கொடுத்தது அண்ணாமலை படத்தில்தான் நிகழ்ந்தது. அது இப்போது வரை தொடர்கிறது.
5.) 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கண்டப்படம் அண்ணாமலை.
6.) தமிழ் சினிமாவில் சிறிய இடைவெளிக்கு பின்பு அண்ணாமலை படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதினார் கவிஞர் வைரமுத்து.
7.) அண்ணாமலை திரைப்படம் தெலுங்கிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலங்கில் "கொண்டப்பள்ளி ராஜா" என்று வெளியானது. கன்னடத்தில் உபேந்திரா நடிப்பில் "கோகர்னா" என்று ரிலீஸ் ஆனது.
8) அப்போதெல்லாம் ரஜினிக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பனிப்போர் நிகழ்ந்துக்கொண்டிருந்த காலம். அண்ணாமலை போஸ்டரை நான் எங்கும் பார்கக்கூடாது என கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டதாக வெளியான தகவல்களால் பரபரப்பான சூழல் நிலவியது. ஆனாலும் பிரச்னையை சமாளித்து ஜூன் 27, 1992 இல் வெளியானது அண்ணாமலை.
9) படத்தில் பிரபலாக வரும் வசனங்கள் வேறொருவர் எழுதியபோதும் சிலவற்றில் ரஜினிக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் சில பவர்புல் வசனங்களை ரஜினி கேட்டுக்கொண்டதற்காக பாலச்சந்தரே எழுதினார்.
10) ரஜினியின் ஓப்பனிங் பாடலான "வந்தேன்டா பால்காரன்" பாட்டுக்கு நடனம் அமைத்தது பிரபுதேவா.