இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த வசந்தை ஒருநாள் தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்திருக்கிறார் தயாரிப்பாளர் விவேக் சித்ரா சுந்தரம். தனது தயாரிப்பின்கீழ் ஒரு படத்தை இயக்குமாறு கேட்டிருக்கிறார். தன்னிடம் கதையே இல்லாதபோது தன்னை ஒரு இயக்குநராக்க, சுந்தரம் சார் போன்ற தயாரிப்பாளர்கள் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய வரம் என்கிறார் வசந்த்.
இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு இயக்குநர் வசந்த் பேசியுள்ளார். அதில், ’இந்த படத்துக்காக எஸ்.பி.பி சாரை அணுகியபோது, எனக்கு படம் நன்றாக ஓடவில்லை என்றால் நான் பாடகராகவே இருந்துவிடுவேன். ஆனால் உனக்கு அப்படியில்லை. எதற்கு சிரமம் எடுக்கிறாய் என்று கேட்டார். என்னுடைய ஏ.ஆர். ரங்கநாதன் கேரக்டருக்கு பொருத்தமான ஆள் நீங்கள்தான் என சமாதானப்படுத்தினேன். இதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவரும் ஓகே சொல்லிவிட்டார்.
பெண் கதாபாத்திரத்திற்கு முதலில் சுஹாசினியைத்தான் கேட்டேன். அவருக்கு அடுத்தடுத்து படங்கள் இருந்ததால் அடுத்து ராதிகாவை அணுகினேன். இந்த படத்தில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தினார். அதற்காக பிலிம்ஃபேர் விருதும் அவருக்குக் கிடைத்தது.
படத்தில் கதாநாயகியின் பெற்றோர் இறந்துவிடும் சீன் அது. 5 நிமிடம் அந்த சீனைப் பற்றி என்னிடம் பேசினார். பின்பு 20 நிமிடம் தருமாறு கேட்டுக்கொண்டார். அவர் தியானம் செய்யப்போவதாக நினைத்தேன். ஆனால் வெளியே வந்த அவர் கேமிரா முன்பு உடைந்து அழுத காட்சி அனைவரையும் உருகவைத்தது. ஒரே டேக்கில் அந்த சீனை முடித்தோம். ராதிகாவின் நடிப்பில் மறக்கமுடியாத ஒன்று.
அஞ்சுவின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சுகன்யாவைத்தான் கேட்டேன். முன்பே பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாகக் கூறிவிட்டார். பின்பு ரம்யா கிருஷ்ணாவை அணுகினேன். அவரும் பிஸியாக இருந்ததால், அப்போதுதான் அறிமுகமாகி இருந்த அஞ்சுவை அணுகினேன். உடன் இருந்தவர்கள் ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டினார்கள். ஆனால் அவருடன் பேசியபிறகு எனக்கு அவர்மீது நம்பிக்கை வந்தது.
இளையராஜா சாரின் இசையைப் பற்றி கூறவேண்டியதில்லை. ‘மண்ணில் இந்த காதலின்றி’ பாடலைத் தவிர மற்ற அனைத்துப் பாடல்களையும் வெறும் 30 நிமிடத்தில் இயக்கி முடித்தார். அவர் என்னிடம் கேட்ட ஒன்றே ஒன்று, ‘கற்பூர பொம்மை ஒன்று’ பாடலை சில சீன்களில் சிறிது நேரம் வைக்கலாமா? அப்போதுதான் இந்த பாடம் எப்போது வரும் என பார்ப்பவர்களுக்கு ஆர்வம் உருவாகும் என்று கூறினார். நானும் ஓகே சொல்லிவிட்டேன். இரண்டாவது முறை என கேட்க இடமில்லாமல் அனைத்துப் பாடல்களுமே சூப்பராக இருந்தது.
ஆரம்பத்தில் ’மண்ணில் இந்த காதலின்றி’ பாடல் என்னுடைய ப்ளானில் இல்லை. ஆனால் ஒரு பெரிய பாடகரை வைத்து படம் இயக்கும்போது அவருடைய திறமையைக் காட்ட ஒரு பாடல் கூட வைக்காமல்விட்டால் எப்படி எனத் தோன்றியது. இதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கையில், மூச்சுவிடாமல் ஒரு பாடல் வைத்தால் எப்படி இருக்கும் என தோன்றியது. அவரிடம் கேட்டபோது அவரும் சிரித்துக்கொண்டே ஒத்துக்கொண்டார்.
பின்னர் ராஜா சாரிடம் கேட்டேன். அவரும் நல்ல ஐடியாவாக இருக்கிறதே... இதை ஆரம்பத்தில் வைக்காமல் சரணத்தில் வைத்துக்கொள்ளலாம் என கூறினார்.
ஐந்து நிமிடம் பாடல் முழுவதையும் மூச்சுவிடாமல் பாடினார் என நிறையப்பேர் தவறாக புரிந்துகொண்டார்கள். ஆனால் 40 நொடிகள் மட்டுமே மூச்சை இழுத்து பாடியுள்ளார்’’ என தனது நினைவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் வசந்த்.
முப்பது ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இந்த படத்தில் வரும் பாடல்களை முணுமுணுக்காதவர்களே இல்லை. என்றும் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத இடத்தை பிடித்திருக்கிறது ‘கேளடி கண்மணி’.