முதல் தமிழ்ப்படமான கீசகவதம் வெளிவந்து 100 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி 100 திரைக்கலைஞர்களுக்கு 100 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளதாக இயக்குனர் ஜனநாதன் தெரிவித்துள்ளார்.
கீசகவதம் என்ற முதல் முழு நீள தமிழ்ப்படம் 1916ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தை ஆர்.நடராஜ முதலியார் தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப் படம் நூற்றாண்டைக் கண்டுள்ளதைக் கொண்டாடும் விதத்தில் இயக்குனர் ஜனநாதனை நிறுவனராகக் கொண்ட உலகாயுதா என்ற அமைப்பு திரைக்கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் தேசிய சலனப்படம் 100 ஆண்டு எனும் தலைப்பில் அந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது குறித்து ஜனநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த 100 கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். தங்கப்பதக்கத்திற்கான செலவுத் தொகையை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜனநாதன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.