மூன்றாம் பிறை முதல் 96 வரை.. காதலில் தோற்றாலும் காவியங்களாக மாறிய தமிழின் 10 படங்கள்!

மூன்றாம் பிறை முதல் 96 வரை.. காதலில் தோற்றாலும் காவியங்களாக மாறிய தமிழின் 10 படங்கள்!
மூன்றாம் பிறை முதல் 96 வரை.. காதலில் தோற்றாலும் காவியங்களாக மாறிய தமிழின் 10 படங்கள்!
Published on

காதலுக்கு எப்போதுமே முன்னுரை தேவை இல்லை. கோபம், விருப்பு, வெறுப்பு, ஆணவம் உள்ளிட்ட உணர்ச்சிகளைவிட, ஆண் - பெண் ஆகிய இருபாலருக்கும் இடையே உருவாகும் காதல் என்ற உணர்வு, எத்தனை எதிர்ப்புகளை சந்தித்தாலும் இன்றளவும் மிக உன்னதமாகவே கருதப்படுகிறது. அது வெற்றியாக அமைந்தாலும் சரி, தோல்வியாக அமைந்தாலும் சரி. சங்கக் காலம் முதல் இன்றுவரை காதலை சொல்லும் விதம் தான் மாறியிருக்கிறதே தவிர, காதல் உணர்வு அழியவில்லை. அந்தக் காதலை மையமாக வைத்து உருவான தமிழ்ப் படங்களில் காதல் தோற்றாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று, வெற்றிப்படமாக மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இங்கு சிறு தொகுப்பாக காணலாம்.

1. மூன்றாம் பிறை

இயக்குநர் பாலு மகேந்திராவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக அறியப்பட்டப் படம் ‘மூன்றாம் பிறை’. 1982-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில், ஸ்ரீதேவிக்கு தன் காதலையும், இத்தனை நாட்கள் அவர்கள் வாழ்ந்த நாட்களையும் புரியவைக்க, நடிகர் கமல்ஹாசன் ரயில் நிலையத்தில் படும்பாடு, எக்காலத்தில் படம் பார்ப்பவர்களையும் கலங்க வைக்கும். கார் விபத்தில் பழய நினைவுகளை எல்லாம் மறந்துபோய், அவ்வளவு நாட்களாக சிறு குழந்தைப் போல், கமலுடன் வாழ்ந்து வந்த ஸ்ரீதேவி, நினைவுகள் திரும்பியதும் தனது தாய், தந்தையுடன் செல்வதற்காக எத்தனிப்பார். அப்போது, ஸ்ரீதேவி தன்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் தன் வாழ்க்கையை விட்டுப் பிரியும் போது கமல்ஹாசனின் வலியின் ஆழத்தைப் புரிந்துகொள்வதற்காகவே, இந்தப் படத்தைப் பார்க்கலாம். இந்தப் படம் பார்த்தப் பின்பு ரசிகர்களிடையே இதயம் கனமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு தோன்றும்.

2. தளபதி

மணிரத்னம் இயக்கத்தில், ரஜினிகாந்த், மம்முட்டி, ஷோபானா, பானுப்பிரியா, கீதா, ஸ்ரீவித்யா, நாகேஷ் நடிப்பில், 1991-ம் ஆண்டு வெளியானப் படம் ‘தளபதி’. இந்தப் படத்தில், எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இருவரின் காதலை அழகாக காட்டியிருப்பவர் இயக்குநர் மணிரத்னம். எதுக்கெடுத்தாலும் வன்முறையில் ஈடுபடும் கதாநாயகன் ரஜினிகாந்த், எதற்குமே அமைதியான, பயந்த சுபாவமுள்ள குணத்துடன் பேசும் ஷோபானா. இவர்கள் இருவருக்கும் இடையே உண்டாகும் காதல், கல்யாணம் என்ற அடுத்த நிலைக்கு போகும்போது, சமூகம், வேலை, குணம், படிப்பு என அனைத்தும் முட்டுக்கட்டையாக வந்து நிற்கும். இதனால் இவர்களது காதல் முறிந்து போகும். நட்பு என்ற அடிப்படையை கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், ரஜினிகாந்த் - ஷேபானாவின் காதல் முறிவு, ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதற்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணமாக அமைந்திருக்கும். தன்னுடைய கல்யாண தகவலை ஷோபனா சொல்லிய பின்னர், முதலில் அவரிடம் ஆதங்கப்பட்டு பின்னர் வாழ்த்தி அனுப்புவார் ரஜினி. பின்னர் சோகமாக தலையை அவர் திரும்பி பார்க்கும் அந்த காட்சி படமாக்கப்பட்ட விதம் உலகத்தரம். ரஜினியின் நடிப்பு, மணிரத்னத்தின் இயக்கம், இளையராஜாவின் சோக கீதம், சந்தோஷ் சிவனின் அற்புதமான ஒளிப்பதிவு என எல்லாமே உச்சம் தொட்ட இடம் அது. காதலில் துயரத்தை பார்க்கும் அனைவரையும் உணர வைத்த காட்சி அது.

3. சேது

‘தளபதி’ படத்தைப் போன்றே, சாதுவான ஹீரோயினுக்கும், முரட்டு குணம் நிறைந்த ஹீரோவுக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘சேது’. பாலா இயக்கத்தில், விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவக்குமார் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளிவந்தப் படம். முதலில் எதிர்மறை கருத்துக்களை கொண்டிருந்தப் படம், நாளாக நாளாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தனது காதலை, காதலிக்கு புரியவைத்துவிட்டு மகிழ்ச்சியில் காதலன் இருக்கும் நிலையில், அதிரடி திருப்பங்கள் நிறைந்த காட்சிகளால் அந்தக் காதல் நிறைவேறாமலேயே போய்விடும். மற்ற காதல் படங்களை போல் குடும்ப எதிர்ப்போ, சமூக வேறுபாடுகளோ தடையாக இல்லாமல் இந்தப் படம் அமைந்திருக்கும். இறுதிக் காட்சியில் மனதை ரணமாக்கும் வகையில் விக்ரமின் நடிப்பு போனசாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். “வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி; காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி” என்ற பாரதியின் வரிகளை இளையராஜாவின் குரலில் கேட்கும் போதும் நமக்கு அந்த சோகம் அப்படியே அப்பிக் கொள்கிறது. காதலியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத காதலனின் கொடுந்துயரத்தை வார்த்தைகளாலும், இசைக்கோர்வையாலும் வடித்திருந்த பாடல் அது. 

4. ஆட்டோகிராஃப்

சேரன் இயக்கத்தில், கோபிகா, சினேகா, கனிகா, மல்லிகா உள்ளிட்ட பலர் நடிப்பில், காதலர் தினத்தன்று 2004-ம் ஆண்டு வெளியானப் படம் ‘ஆட்டோகிராஃப்’. பள்ளிப்பருவ காதலையும், கல்லூரி காதலையும் மையமாக வைத்து வெளிவந்தப் படம். இந்தப் படத்தில், கேரள மாநிலப் பெண்ணுக்கும், தமிழ் பையனுக்கும் இடையேயான காதலை, மொழிகள் கடந்து உருக்கமாகக் கூறி, ரசிகர்களை உண்மைக் கதை போன்றே உருக வைத்திருப்பார் சேரன். அதிலும், பரத்வாஜின் இசை, 4 விதமான பெண்களை வெவ்வேறு காலக்கட்டங்களில் சந்திக்கும் தருணத்திற்கு ஏற்றவாறு மாறுபாட்டுடன் அமைந்திருக்கும்.

5. காதல்

கதாநாயகன் பரத்தை தவிர, புதுமுகங்கள் நடிப்பில், உண்மையான காதல் கதையை வைத்து, அற்புதமாக இயக்கி இருப்பார் பாலாஜி சக்திவேல். 2004 -ம் ஆண்டு வெளியான ‘காதல்’ படம், பட்டிதொட்டியெங்கும் வரவேற்பு பெற்றது. வசதி, அதிகார செல்வாக்கில் பெரும்புள்ளியாக வலம் வரும் தண்டபாணியின் மகளான கதாநாயகி சந்தியா, பள்ளிப் பருவத்தில், குடிசையில் வாழ்ந்து வரும் சாதாரண பைக் மெக்கானிக்கான பரத்தை காதலிப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இறுதிக் காட்சியில் ஹீரோவின் பரிதாபமான நிலையை பார்ப்பதா, கணவர் மற்றும் குழந்தையை பார்ப்பதா என்ற குற்றவுணர்வுடன் ஹீரோயின் தன்னையே அடித்துக்கொள்ளும் காட்சி கண் கலங்க வைத்திருக்கும். ‘நீ நல்லா இருக்கணும்தானே நான் இப்படி செஞ்சேன்..’ அவர் கலங்கி நம் கண்களையும் குளமாக்கி இருப்பார். ஒரே நேரத்தில் ’காதலின் உன்னதத்தையும், ஜாதிக் கொடுமையின் வீண் வறட்டு கௌரவத்தின் உச்சத்தையும் வெளிக்கொண்டு வந்திருப்பார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

6. விண்ணைத் தாண்டி வருவாயா

நகரத்து காதல் தோல்வியை மிகவும் அழகாக காட்டியிருப்பார் இயக்குநர் கௌதம் மேனன். சிம்பு, த்ரிஷா, சமந்தா நடிப்பில், கடந்த 2010-ம் ஆண்டு, பிப்ரவரி 26-ம் தேதி வெளியான திரைப்படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. மதம், மொழி, வயதில் மூத்தப் பெண் என பல்வேறு காரணங்களால், குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகளை மையமாக வைத்து இவர்களின் காதல் ஒன்றுகூடாமல் பிரிந்துவிடும். ஏ.ஆர். ரகுமான் இசையில், இந்தப் படம் இளைஞர்களை மிகவும் கவர்ந்தப் படம் என்றே கூறலாம். ஜெஸ்ஸியின் பெயரை இன்றளவும் பல இளைஞர்கள் உச்சரித்துக் கொண்டிருக்கக் கூடும். இருவரில் யாரின் துயரை பெரிதென கருதுவது, காதலின் தோல்விக்கு யாருடைய நிலையை காரணமாக சொல்வது என இருதரப்பின் பல நியாயங்களையும் சொல்ல முயற்சித்திருப்பார் கௌதம் வாசுதேவ் மேனன்.

7. மதராசப் பட்டினம்

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில், மதராசை சேர்ந்த சலவைத் தொழிலாளியான ஆர்யாவுக்கும், பிரிட்டிஷ் கவர்னரின் மகளான ஏமி ஜாக்சனுக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து, 2010-ம் ஆண்டு வெளியானப் படம் ‘மதராசப் பட்டினம்’. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும்போது இவர்கள் இருவரும் பிரிந்துவிடுவதுபோல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். 60 ஆண்டுகளுக்குப் பின்னர், காதலிக்கும்போது தனது தாயின் தாலியை கொடுத்த கதாநாயகனிடம், திருப்பி கொடுப்பதற்காக, கதாநாயகி லண்டனில் இருந்துவருவார். அப்போது, தனது நினைவால் காதலன் திருமணம் செய்துகொள்ளாமல், தனது கனவுகளை நிறைவேற்றியதைக் கண்டு, காதலன் சமாதியிலேயே காதலியும் உயிரை துறக்கிறார். ஜி.வி. பிரகாஷின் துள்ளல் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களை பெரிதளவும் ஈர்த்தது. இந்தப் படத்தில் ஆர்யாவும், எமி ஜாக்சனும் தப்பித்துச் செல்லும் காட்சி மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கும். இருவரும் எப்படியாவது தப்பித்து சென்றுவிட மாட்டார்களா? அவர்களது காதல் எப்படியாவது வெற்றி பெற்றுவிடாத என பார்ப்பவர்களையும் ஏங்க வைத்துவிடும் அந்த காட்சி. பின்னணி இசையும் அற்புதமாக காதல் உணர்வுகளை கடத்தி இருக்கும்.

8. மீசைய முறுக்கு

ஹிப் பாப் ஆதி, ஆத்மிகா, விவேக் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மீசைய முறுக்கு. இந்தப் படத்தில் லட்சியத்தை அடையப் போராடும் கதாநாயகன், கடைசியில், தனது லட்சித்தியத்திற்காக காதலை இழக்கிறான். இந்தப் படமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பாடல் பெரும் வெற்றி பெற்றது.

9. கும்கி

விக்ரம் பிரபு, லஷ்மி மேனன், தம்பி ராமையா நடிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கும்கி’. பழங்குடியின மக்கள் வாழும் இடத்தில், காட்டு யானையை அடக்க, கும்கியாக தன் யானை மாணிக்கத்தை நடிக்க வைப்பதற்காக, ஹீரோ விக்ரம் பிரபு 2 நாட்களுக்கு செல்கிறார். ஆனால், அங்கு கிராமத் தலைவரின் மகளான லஷ்மி மேனன் மீது காதல் ஏற்பட, சிறிய யானையான மாணிக்கத்தை கும்கியாக மாற்ற முயற்சிக்கிறார் விக்ரம் பிரபு. இதில் தனது மாமா தம்பி ராமையா, உதவியாள், யானை மாணிக்கம் என அனைத்தையும் இழக்கிறார். இதனால் இவர்கள் காதல் முறிகிறது. மிகவும் பச்சைப் பசேலென இருக்கும் லொகேஷனில், யானை, காதல் ஆகியவற்றை கதைக்களமாக கொண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

10. 96

பள்ளிப் பருவக் காதலை, வித்தியாசமான முறையில் சொல்லியிருந்தப் படம் ‘96’. விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில், பள்ளிப் பருவ காதலியாக இருந்தாலும், அவரின் நினைவால் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் கதாநாயகனை, மீண்டும் கதாநாயகி சந்திக்கும்போது நிகழும் ஒருவிதமான புரிதல்களை மிகவும் அழகாக காட்டியிருப்பார் இயக்குநர் சி. பிரேம் குமார். காதலர்கள் மட்டுமின்றி, பள்ளிப் பருவ நண்பர்களை மீண்டும் சந்திக்க தோன்றும்விதமாக இந்தப் படம் அமைந்திருந்ததும் தனிச்சிறப்பு. வசந்த காலங்கள் கசந்து போகுதே, இரவிங்கு தீயாய் நமை சூழுதே போன்ற பாடல்கள் காதலின் வலியை, பிரிவின் துயரை அற்புதமாக கடத்தியிருக்கும். காதல் தோல்வியை சந்தித்த இன்றைய இளைஞர்கள் இரவின் கீதமாக இந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். 

இதுமட்டுமின்றி, ‘மைனா’, ‘கஜினி’, ‘பருத்திவீரன்’ உள்பட பல படங்களும், முக்கோண காதல் கதைகளை கொண்ட ‘மௌனராகம்’, ‘பூவே உனக்காக’, ‘எந்திரன்’, ‘இயற்கை’, ‘கோ’, ‘சிங்கம் 2’, ‘மின்னலே’, ‘மின்சார கனவு’, ‘முத்து’, ‘வாலி’ உள்பட பல படங்கள் காதல் தோல்வியால், ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற, வெற்றிபெற்ற படங்கள் வரிசையில் சொல்லிக்கொண்டே போகலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com