அதற்குள் ஒரு ஆண்டு கடந்துவிட்டதா என்பதுபோல இருக்கிறது. கார்த்தி நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படம் வெளியான நாள் அக்டோபர் 25, 2019. ரசிகர்களாலும் தமிழ் சினிமா ஆர்வலர்களாலும் பெருமையாகப் பேசப்பட்ட படமாக அது இருந்தது.
விஜய்யின் பிகில் படத்துடன் ரலீசான கைதி, பாடல்களோ, கதாநாயகியோ இல்லாமல் வெளிவந்து சூப்பர்ஹீட்டான படம். தெலுங்கில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியிடப்பட்டது.
படத்தின் முதல் ஆண்டு நிறைவை ட்விட்டரில் நினைவுகூர்ந்துள்ள கார்த்தி, "எல்லா இரவுகளும் படப்பிடிப்பு நடத்தினோம். தங்களுடைய சிறந்த பங்களிப்பைக் கொடுப்பதில் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்கள். அதுவொரு அற்புதமான அனுபவம்" என்று பதிவிட்டுள்ளார். இதேபோல படத்தைத் தயாரித்த ட்ரீம் வாரியர் நிறுவனமும், "ஒரு முழுமையான ஆக்சன் படத்தின் ஓர் ஆண்டு நிறைவு. அனைவருக்கும் நன்றி" என்று ட்வீட் செய்துள்ளது.
சமூகவலைதளங்களில் கைதி படத்தின் ஓர் ஆண்டை டிரெண்டிங் செய்யும் ரசிகர்கள், அதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அந்தப் படங்களை முடித்ததும் கைதி படத்தின் தொடர்ச்சியை இயக்க வாய்ப்பிருக்கலாம் என கூறப்படுகிறது