சமீபத்தில் வெளியாகி பரபரப்பு சர்ச்சையில் சிக்கியுள்ள ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் மூலம் வலைதளவாசிகளின் வலையில் சிக்கியுள்ளார் நடிகர் உதய் மகேஷ். இத்தொடரில், இவர் நடித்த ‘செல்லம் சார்’ கேரக்டர்தான் தற்போது மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் இந்தியளவில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது. அதேநேரம், இந்தத் தொடருக்கும் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் உதய் மகேஷை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்...
சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் ’செல்லம் சார்’ கேரக்டருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
“நடிப்பதற்கு முன்பு இது ஒரு சின்ன கேரக்டர்னுதான் தெரியும். நடிக்கும்போது சின்ன நகைச்சுவை இருக்குன்னு தெரிஞ்சது. ஆனால், இவ்ளோ பெரிய வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கவில்லை. எல்லோரும் போன் செய்து பாராட்டுகிறார்கள். என் நண்பர்களுக்கே பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. செல்லம் சார் குறித்த மீம்ஸ்களை பலரும் எனக்கு வாட்ஸப்பில் அனுப்பினார்கள். ஆரம்பத்தில் நானும் பார்த்துவிட்டு கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்துவிட்டேன். ஆனால், எனது கேரக்டரை போகப்போக ரசிக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். செல்லம் சார் கேரக்டரை வடிவமைத்த எழுத்தாளரின் வெற்றி இது. அவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஆஃபிஸ் சீரியலில் நான் நடித்த ’விஸ்வநாதன் சார்’ மிக பிரபலமானது. இப்போது ’செல்லம் சார்’ பிரபலமானதில் ரொம்ப சந்தோஷம்.
'செல்லம் சார்' கதாபாத்திரத்துக்காக நீங்கள் செய்த ஹோம் ஒர்க் என்னென்ன?
“ஹோம் ஒர்க் என்று எதுவும் பெரியதாக பண்ணவில்லை. இயக்குநர் ஷூட்டிங்கிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இப்படி நடிக்க வேண்டும் என்று சொல்வார். அவர்கள் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு நடித்தேன். சின்ன ரோல்தானே”.
'தி ஃபேமிலி மேன் சீசன் 2'-ல் இணைந்ததன் பின்புலத்தைச் சொல்லுங்களேன்...
“இந்த வெப் தொடருக்காக நடிகர்களை தேர்வு செய்த மும்பைக் குழுவினர் சென்னையில் வந்து நடிகர்களை தேர்வு செய்தார்கள். இந்தக் குழுவினருடன் ஏற்கனவே விளம்பரங்களில் பணிபுரியும்போது எனக்கு அறிமுகம் இருந்ததால், ஆடிஷனில் கலந்துகொண்டேன். முதன்முதலில் அழகம்பெருமாள் கேரக்டருக்காகத்தான் எனக்கு ஆடிஷன் வைத்தார்கள். ஆடிஷன் முடித்தப்பிறகு இரண்டு மாதங்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை. திடீரென்று ஒருநாள் போன் செய்து ’அழகம்பெருமாள் கேரக்டருக்கு நீங்கள் வேண்டாம். வேற ஒரு ரோல் இருக்கு பண்றீங்களா?’ என்று கேட்டார்கள். நானும் ஃபேமிலி மேன் ஃபேமஸான தொடர் என்பதால் ஓகே சொல்லிவிட்டேன்”.
இதனை, காவல்துறை சார்ந்த படங்களிலேயே நடிப்பதால் ’ஃபேமிலி மேன் 2’ தொடரிலும் புலனாய்வு அதிகாரியாக நடிக்க வைத்தார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
“அப்படியும் எடுத்துக்கலாம். அவங்க மனதில் தோன்றியதால்தானே செல்லம் சார் கேரக்டருக்கு அழைத்திருக்கிறார்கள். நானும் ஒரு இயக்குநர். என் மனதிலும் இவரை போட்டால் சரியாக இருக்கும் என்று உருவம் இருக்குமல்லவா? அப்படி அந்த இயக்குநருக்கும் இருந்திருக்கலாம்”.
அதிகம் காவல்துறை சம்மந்தப்பட்டக் கதைகளிலேயே நடிக்கிறீர்களே? இதெல்லாம், தானாக அமைவதா? நீங்களாக விரும்பிக் கேட்பதா? இதற்காக, ஏதாவது பயிற்சிகள் எடுத்துக்கொள்கிறீர்களா?
“எனக்கே ஏன் கால்வதுறை கேரக்டாராக வருகிறது என்று தெரியவில்லை. நானாக விரும்பி கேட்பதுமில்லை. ஆனால், அதுதான் தொடர்ந்து வருகிறது. ஒருவேளை நான் உயரமாக இருப்பதால் அப்படி இயக்குநர்களுக்குத் தோன்றியிருக்கலாம். எல்லோரும் காவல் அதிகாரி கெட்டப்தான் உங்களுக்கு செட் ஆகிறது என்று பாராட்டுகிறார்கள். சிறு வயதில் காவல்துறையில் சேரவேண்டும் என்று எனக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆனால், எனது தாத்தா நான் இன்ஸ்பெக்டராக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார். அது முடியாமல் போய்விட்டது. மற்றபடி, எந்தப் பயிற்சியும் எடுத்துக்கொள்வதில்லை. காலையில் வாக்கிங் போறதோட சரி”.
மனோஜ் பாஜ்பாய் உடனான ஷூட்டிங் பர்சனல் அனுபவங்களைப் பகிருங்களேன்...
“மனோஜ் பாஜ்பாய்யை எனக்கு முன்பிருந்தே தெரியும். நண்பர் நட்டி ஒளிப்பதிவாளராக இருந்த காலகட்டத்தில் மனோஜ் பாய்பாய்யுடன் நல்ல பழக்கம். நீண்ட வருடத்திற்குப்பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு ’தி ஃபேமிலி மேன் 2’ வில்தான் கிடைத்தது. பிரமாதமான நடிகர்.அவருடனான எனக்கு சீன்கள் குறைவுதான். அவருடனான சீன்களை முன்கூட்டியே நானும் அவரும் ஒத்திகை பார்த்துக்கொள்வோம். சக நடிகர்களுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடிய நடிகர்”.
உதவி தேவைப்படும்போதெல்லாம் நீங்கள் அழைக்கும் ’செல்லம் சார்’ யார்?
”எனக்கும் அப்படி உதவியின் தேவைக்கேற்ப உதவ நான்கைந்து நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின், பெயரை குறிப்பிட்டு பெயரை சொல்ல விரும்பவில்லை. நண்பர்கள்தான் எனது உலகம்”.
இந்தத் தொடரில் நடிப்பதற்கு முன் நீங்க யாரோட செல்லமா இருந்தீங்க?
“இதுவரைக்கும் நிஜத்துல எனக்கு கருத்து தெரிஞ்ச நாளலருந்து என்னை யாரும் செல்லம் என்று அழைத்ததில்லை. ஒருவேளை நான் குழந்தையாக இருக்கும்போது பெற்றோர் அழைத்திருக்கலாம். என் மனைவிகூட அழைத்ததில்லை. வேறு பெயர் வைத்துதான் அழைப்பார்”.
தொடரில், அவுட் கோயிங்கிற்கு ஒரு போன் இன்கமிங்கிற்கு ஒரு போன். நிஜத்தில் எத்தனை போன் வச்சிருக்கீங்க?
”சத்தியமா ஒரே ஒரு போன் தான் வச்சிருக்கேன்”.
அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது, உங்களுக்குள் நிச்சயம் ஒரு செல்லம் சார் இருப்பார் என்றே நம்பமுடிகிறது. உண்மையில் செல்லம் சார் கதாபாத்திரத்துக்கும் உங்கள் இயல்புக்கும் இடையிலான இடைவெளி எத்தகையது?
”நான் நிஜத்தில் பயங்கர ஜாலியானவன். செல்லம் சார் மாதிரி இறுக்கமான ஆள் கிடையாது. செல்லம் என்ற கேரக்டர் பல விஷயங்கள் தெரிஞ்ச பக்குவப்பட்ட ஒரு மெச்சூரான கேரக்டர். நிஜத்தில் நான் அப்படிக் கிடையாது. காலேஜ் படிக்கும்போது நண்பர்களின் காதலை கண்டுப்பிடிக்கும் சின்ன சின்ன வேலை பார்த்திருப்பேன். மற்றபடி ஸ்பை எல்லாம் இருந்ததில்லை.
தொடர் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிக்கிறது என்கிறார்களே? தமிழராக இருக்கும்போது எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
“என்னிடம் கதையே சொல்லவில்லை. என் கதாபாத்திரத்திற்கு நான்கைந்து சீன்கள் மட்டும்தான் என்றார்கள். ஈழத்தமிழர்கள் தொடர்பான கதை என்பது மட்டும் எனக்கு தெரியும். ஆனால், முழுக்கதையும் தெரியாது. எப்படி எடுக்கப்போகிறார்கள் என்பதும் தெரியாமல் இருந்தது. பார்த்தபிறகுதான் எனக்கே தெரிந்தது”.
முழுக்க முழுக்க தமிழீழ விடுதலைப் போராளிகளை, அதாவது தலைவர் தொடங்கி பெண் போராளி வரை ஒட்டுமொத்தமாக தவறான கண்ணோட்டத்தில் காட்டப்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“ஒரு நடிகராக எனக்கு சிறு போர்ஷன்தான். இதில் பேசப்பட்ட அரசியல் குறித்து எதையும் நான் பேச விரும்பவில்லை. அரசியல் சார்ந்தும் இன்வால்வ் பண்ணிக்கொள்ள விரும்பவில்லை. எந்த நடிகரும் தெரிந்தே நடிக்க மாட்டார்கள். ஒரு கேரக்டர் சொன்னாங்கன்னு நடிச்சிட்டு வந்துட்டேன். எல்லா தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய உணர்வுதான் எனக்கும் இருக்கு. அந்த வகையில் நான் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன். தமிழர் என்ற உணர்வு எப்படி இல்லாமல் போகும்?”.
தமிழீழ விடுதலைப் போராட்டம் மட்டுமின்றி, தமிழகம் - குறிப்பாக சென்னையை தவறாக சித்தரித்தாக பல குற்றச்சாட்டுகள் உண்டு. குறிப்பாக, இங்கு காட்டப்பட்ட ஆண்கள் பலரும் பாலியல் குற்றம் செய்பவர்களாக காட்டப்பட்டனர்; எத்தனையோ வடமாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை மிகுதியாக இருக்கும்போது, எத்தனையோ வடமாநிலங்களில் வெயில் அதிகமாக இருக்கும்போது சென்னை ரொம்ப மோசமாக சித்தரிக்கப்பட்டதாக எழும் விமர்சனங்கள் குறித்து...
“எல்லோரையும் போல இந்தத் தொடரை ஒரு கதையாக சினிமாவாகத்தான் பார்த்தேன். நான் நடிக்கவில்லை என்றால் இதனை ஒரு கதையாகத்தான் பார்ப்பேன். அதனைச்சார்ந்து வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் இயக்குநரிடமும் இதனை எழுதியவர்களிடமும் கேட்கவேண்டும். நான் எதாவது தவறாக சித்தரித்தேனா?”.
கதை முன்கூட்டியே தெரிந்திருந்தால் நீங்கள் நடித்திருக்க மாட்டீர்களா?
நோ கமெண்ட்ஸ்.
’நாளை’, ’சக்கர வியூகம்’ படத்திற்குப் பிறகு ஏன் படங்கள் இயக்காமல் நடிப்பிற்குள் நுழைந்துவிட்டீர்கள்?
“சில காரணங்களால் எனது அடுத்தப்படங்கள் தள்ளிப்போனது. அந்த சமயத்தில்தான் ‘மூடர் கூடம்’ நவீன் வாய்ப்பு கொடுத்தார். அதனைத்தொடர்ந்து வாய்ப்பு வந்துகொண்டே இருந்ததால் நடிப்பையே தொடர்ந்தேன். நான் நடிகனானது ஒரு விபத்துதான். நடிகனாக வரவேண்டும் என்றெல்லாம் வரவில்லை. இயக்கம்தன் எனது தொழில். மீண்டும் இரண்டு மாதத்தில் காமெடி ஜானரில் நான் இயக்கும் படத்தை அறிவிக்கவிருக்கிறேன்”.
இயக்குநராக நடிகராக நீங்கள் கடந்து வந்த பாதை?
“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். ஒரு சாதாரண மிடிள் கிளாஸ் குடும்பம். அப்பா அரசுத்துறையில் பணியாற்றினார். பள்ளிப்படிப்பு பல்லாவரம் பம்மலிலும், பாலிடெக்னிக்கில் டிப்ளமோ கெமிக்கல் எஞ்ஜினியரிங் படிப்பை அடையாரிலும் முடித்தேன். இளம் வயதில் ரஜினி சார், கமல் சார் நடிப்பை பார்த்துவிட்டு சினிமா ஆர்வம் வந்துவிட்டது. அப்போ, நண்பர் நட்டி உதவி ஒளிப்பதிவாளராக இருந்தார். அவருடன் நட்பாகி, அந்த நட்பே பி.ஆர் விஜயலட்சுமியிடம் உதவி இயக்குநராக சினிமா வாழ்க்கையை தொடர வைத்தது. இயக்குநராவது சாதாரண விஷயம் அல்ல.மிகப்பெரிய போராட்டம். எல்லா இயக்குநர்களும் போராட்டத்தை சந்தித்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். எனது மனைவி பிந்து. எனக்கு பிடித்த தொழிலில் இருக்கிறேன் என்பதில் அவங்களுக்கு சந்தோஷம்தான். மூத்த மகன் உதய் கிஷோர் கல்லூரி முதலாம் ஆண்டும், மகள் ஜனனி ப்ள்ஸ் ஒன்னும் படிக்கிறார்கள். என் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்த முதல் நபர் நான்தான்”.
’தி ஃபேமிலி மேன் 2’ தொடருக்குப் பிறகு வேறு என்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
” ’செல்லம் சார்’ ட்ரெண்டிங் ஆனதற்குப் பிறகு இந்தியில் மூன்று படங்களுக்கும் தமிழில் இரண்டு மூன்று படங்களுக்கும் அழைத்துள்ளார்கள். பேச்சுவார்த்தைப் போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் உறுதியாகவில்லை. ஆனாலும், நான் எனது படம் இயக்கும் பணிகளிலும் பிசியாக இருக்கிறேன்”.
- வினி சர்பனா