’மேதகு’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிட்டு தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். இந்த சர்ச்சை, அவரின் படத்திற்காக அல்ல. அவர், பதிந்த பழைய ஃபேஸ்புக் பதிவுகளுக்காக. முதல்வர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்.பி, திருமாவளவன் எம்.பி, நடிகை நயன்தாரா உள்ளிட்டோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, இயக்குநர் கிட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் விமர்சனம் செய்த பதிவுகளையெல்லாம் தோண்டியெடுத்து பரப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
முதல் படத்தையே சமூக பொறுப்போடு எடுத்த இயக்குநர், இப்படி சமூக பொறுப்பில்லாமல் நாகரீகமற்று பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கலாமா என்ற விமர்சனத்தை அக்கறையோடு முன் வைக்கிறார்கள். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் கிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது செயல்களுக்காக வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், ”வணக்கம், நான் உங்கள் கிட்டு. நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய நமது தேசியத் தலைவரின் ஆரம்பக்கட்ட வாழ்க்கை வரலாறு படமான ‘மேதகு’ உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு, என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் என்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்கிறேன்.
கடந்த 2019-ஆம் ஆண்டு காலகட்டங்களில் கட்சித் தலைவர்கள் ஏதாவது சொன்னால், அதற்கு கவுன்ட்டர் அட்டாக் போடுவேன். அது நையாண்டியாகவும் இருக்கலாம். கேலியாகவும் இருக்கலாம். ஆனால், போட்டப் பதிவுகளை இப்போது எடுத்துவந்து, அதில் நிறைய மாற்றங்களைச் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
‘மேதகு’ திரைப்படம் மக்களிடம் போய் சேரக்கூடாது என்பதற்காக பலக் குழுக்கள் வேலை செய்கிறார்கள் என்பதை நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. படத்தை எல்லா கட்சியினரும் பார்க்கவேண்டும் என்பதற்காக எல்லாக் கட்சி சார்புடையவர்களையும் அழைத்திருந்தோம். அனைவரையும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் சக்தியாக தேசியத்தலைவரை அப்போதுதான் பார்த்தேன். தலைவர் எல்லாக் கட்சியினருக்கும் அப்பாற்பட்டவர்.
’மேதகு’ பட டைட்டில் கார்டில் கூட ’நன்றி மறப்பது நன்றன்று’ குறளைத்தான் போட்டேன். காரணம், ’மேதகு’ வெளியாக எனக்கு அனைத்துக் கட்சியினரும் உதவியாக இருந்துள்ளார்கள். எல்லோருமே உழைத்திருக்கிறார்கள். இது எனக்காக அல்ல. தலைவரை வெளியில் கொண்டுவரவேண்டும் என்பதற்காக. அதனால், கடந்த 2019 ஆம் ஆண்டில் நான் இட்ட பதிவுகள் தலைவர்கள் மனதை புண்படுத்துமானால் உறுதியாக நான் என்னுடைய வருத்தத்தை பதிவு செய்கிறேன். அதனால், யாரும் தொடர வேண்டாம். ’மேதகு’ படத்தை மீண்டும் மீண்டும் ஆதரிக்க வேண்டுகிறேன்” என்று வீடியோவில் பேசியிருக்கிறார்.
அவர், வருத்தம் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவைக் காண https://twitter.com/kittutamilan/status/1410454002316152832?s=20