நமது ஒழுக்க நெறிகள் தொடர்ந்து சிதைந்து கொண்டே இருக்கின்றன என்று பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி மற்றும் காஞ்சிபுரத்தில் ரோஜா என்ற இளம் பெண் மரணம் தொடர்பாக நடிகர் அக்ஷய் குமார் வேதனையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா. கால்நடை மருத்துவரான இவர், கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்படும் பிரியங்கா, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொதுப் போக்குவரத்து மூலமாக கொல்லூருக்குச் செல்வது வழக்கம். இவரை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் பொது மக்களிடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, பாலிவுட் நட்சத்திரங்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பலரும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய ட்விட்டர் ட்ரெண்டிங்களில் #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy #PriyankaRedddy ஆகிய ஹேஷ்டேக்குகள் முதல் மூன்று இடத்தில் இருந்து வருகின்றன. இந்த ஹேஷ்டேக்குகளில் பலரும் தங்களது கண்டனங்களையும், வருத்தங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில், "ஹைதராபாத்தின் பிரியங்கா ரெட்டியோ, தமிழ்நாட்டின் ரோஜாவோ, அல்லது ராஞ்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சட்டக் கல்லூரி மாணவியோ, ஒரு சமுதாயமாக நாம் ஒழுக்க நெறிகள் துண்டு துண்டாக சிதைந்து வருகின்றன. நமக்குக் கடுமையான சட்டங்கள் தேவை. இது நிறுத்தப்பட வேண்டும்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.