உலகம் முழுக்க பெரும் ரசிகர்களைக் கொண்ட ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில், 25-வது படமான 'NO TIME TO DIE' வெளியாகியிருக்கிறது. Daniel Craig நடிக்கும் கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என்பதால், வழக்கத்தை விட இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
1962-ல் 'டாக்டர் நோ' திரைப்படம் மூலம் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் பிரபலமானது. பாண்டின் அதிரடியான ஆக்ஷன் சாகசங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற சர்வதேச அளவில் அந்தப் படத்திற்கான ரசிகர்கள் அதிகரித்தார்கள். அந்தவகையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் 25-வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் 'NO TIME TO DIE'. Sean connery, George Lazenby, Roger Moore, Timothy Dalton, Pierce Brosnan வரிசையில் 2006-ல் வெளியான 'casino royale' படம் மூலம் பாண்ட் கதாபாத்திரம் ஏற்றார் நடிகர் Daniel Craig. அந்தக் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியவர் இவர்தான் எனும் பாராட்டுகளைப் பெற்றதோடு, 'NO TIME TO DIE' திரைப்படம் வரை 5 முறை ஜேம்ஸ் பாண்டாகவும் நடித்துள்ளார்.
இந்தப் படம் கடத்தப்பட்ட விஞ்ஞானி ஒருவரை மீட்க இத்தாலி, நார்வே, ஜமைக்கா என பல நாடுகளுக்குப் பயணம் செய்து அதிரடி சாகசம் செய்யும் கதைக்களம்தான் என்றாலும், Daniel Craig நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்பதால், வழக்கத்தை விட அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. 2019 ஏப்ரல் மாதம் 'NO TIME TO DIE' படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு அந்தாண்டு நவம்பர் மாதமே படத்தை வெளியிடவும் திட்டமிட்டனர். ஆனால், கொரோனா காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்டு, தற்போது திரைக்கு வந்திருக்கிறது. சுமார் 2000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை Cary Joji இயக்கியுள்ளார்.