கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ திரைப்படம் சீனத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எடுக்கப்பட்ட ‘பயோபிக்’ திரைப்படம் ‘மகாநதி’. இந்தப் படத்தில் சாவித்திரியின் தோற்றத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என வெளியானது. படத்தினை நாக அஸ்வின் இயக்கி இருந்தார். இது கடந்த ஆண்டு மே 9ஆம் தேதி வெளியானது.
கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்த பலரும் அவரை மிகவும் பாராட்டி இருந்தனர். அச்சு அசலாக அவர் சாவித்திரியின் பாத்திரத்திற்கு பொருந்தி போய் இருந்தார். ஆகவே இப்படம் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது.
இந்நிலையில் ‘மகாநதி’ திரைப்படம் சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்பட விழா வரும் ஜூன் 15 முதல் 24 வரை நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியை இயக்குநர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அவர் “ சாவித்திரி படத்தை சீனாவுக்கு கொண்டு செல்கிறோம். நிச்சயம் அவர் பலரது இதயங்களைத் திருடி விடுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படம் ஏற்கெனவே சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதே போல் மெல்போர்ன் விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.