ஹாலிவுட் படத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், 2013 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இதனால் இந் திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. அதை நீக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். உயர் நீதி மன்றம் வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் கேரள உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச்-சில் அப் பீல் செய்தது. விசாரித்த டிவிசன் பெஞ்ச், ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தடை தொடரும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் உருவான ’டீம் 5’ படத்திலும் இந்தியில் உருவான ’அக்சார் 2’ படத்திலும் நடித்தார் ஸ்ரீசாந்த். பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசை பெற்றார். இப்போது ’’கேபரேட்’’ என்ற படத்தில் ரிச்சா சதாவுடன் நடித்து வருகிறார்.
அவர் கூறும்போது, ‘’ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். சின்ன ரோலாக இருந்தாலும் சரி, பெரிய கேரக்டராக இருந்தாலும் சரி. அவர் இயக்கத்தில் நடித்தால், அது என் வாழ்நாள் அனுபவமாக இருக்கும். என் கனவு நனவானது போல வும் இருக்கும். வாழ்க்கையில் எதுவும் நடக்கும் என்று நம்புகிறவன் நான். என் வாழ்வையும் அதிசயமாகத்தான் பார்க்கிறேன்.
உதாரணமாக கேரளாவில் சின்ன கிராமத்தில் பிறந்தேன். மாநில கிரிக்கெட்டில் விளையாடினேன். பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு சென்றேன். இப்போது டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாவில் நடித்துவருகிறேன். இதெல்லாம் நடக்கும்போது வாழ்க்கையில் எந்த அதிசயமும் நடக்கலாம். அதனால் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம்.
என் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கலைத்துறையில் இருக்கிறார்கள். என் தந்தை பல மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். சகோதரி, மலையாள டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். என் சகோதரர் இசை துறையில் இருக்கிறார். என் மைத்துனர் (மது பாலகிருஷ்ணன்) பிரபல பாடகர். அவர்கள் வழியில் இப்போது நானும் வந்துள்ளேன். சினிமாவை எப்போதும் விரும்புவேன். அதோடு கிரிக்கெட்டையும் எனக்குப் பிடிக்கும்’’ என்றார்.