ஊரெல்லாம் தியேட்டர்கள் ஆளற்ற வனாந்தரமாக மூடிக் கிடக்கின்றன. மக்கள் கூட்டத்துடன் உற்சாகமாகக் காணப்படும் அதன் வளாகங்கள் சில இடங்களில் பார்க்கிங் பகுதிகளாக மாறியுள்ளன. பிரபலங்களின் தியேட்டர் அனுபவங்களை தினமும் வெளியிட்டுவரும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், தன் சுவையான தியேட்டர் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் ஜனனி அய்யர்.
"தியேட்டரில் ஒரு படத்தை முழுமையாக பார்த்து ரசித்தேன். அது பீட்சா படம். என் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்துப் பார்த்தேன். வழக்கமாக திகில் மற்றும் த்ரில்லர் படங்களைப் பார்ப்பது பயப்படுவேன். அதன் பின்னணி இசைதான் காரணம். அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு எகிறிக் குதித்தேன். கையில் வைத்திருந்த பாப்கார்ன் சிதறியதில் ஒருவரின் முகத்தின் மேல் போய் விழுந்தது. உடனடியாக அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். அதைப் பார்த்து என் நண்பர்கள் கலகலவென சிரித்தனர்.
ஊரடங்கு வரைக்கும் எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்து புதிய படங்களை ஒவ்வொரு வெள்ளிதோறும் தியேட்டரில் பார்த்துவிடுவோம். அதுவொரு வேடிக்கையான அனுபவம். நான் நடித்த படங்களை தியேட்டரில் பார்ப்பதில் ஆர்வமாக இருப்பேன். பெரும்பாலான நேரங்களில் நான் தியேட்டருக்குச் செல்வதைத் தவிர்ப்பேன். ஆனால் என் படங்களைப் பார்க்க நண்பர்கள் என்னை இழுத்துச் சென்றுவிடுவார்கள்.
படத்தில் வரும் என்னுடைய குளோசப் காட்சிகளைப் பார்க்கும்போது முகத்தை மூடிக்கொள்வேன். அதைப் பற்றி நான் மிகவும் கவனமாக இருப்பேன். மக்களுடைய ரியாக்சனைப் பார்ப்பதற்கு விரும்பமாட்டேன். நான் திரையில் தோன்றும்போதும், என் பெயர் வரும்போதும் நண்பர்கள் உற்சாகத்தில் சத்தம் போடுவார்கள். உண்மையில், நான் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவங்களை இழந்துவிட்டேன்.
வீட்டில் ஹோம் தியேட்டர் இருந்தபோதும், அது முழுமையாக படம் பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்காது. மக்கள் கூட்டத்துடன் தியேட்டரில் பார்க்கும்போது, நகைச்சுவை காட்சிகளுக்கு அவர்களுடன் சேர்ந்து சிரிப்பது வேடிக்கையானது. ஊரடங்கு நாட்களில் நான் இழந்துள்ள மிகப்பெரிய விஷயங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. சில கட்டுப்பாடுகளுடன் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என நம்புகிறேன்" என்று ஜனனி அய்யர் மனந்திறந்து பேசியுள்ளார்.