"விருது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு நடிக்கவில்லை" - விஜய் சேதுபதி பிரத்யேக பேட்டி

"விருது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு நடிக்கவில்லை" - விஜய் சேதுபதி பிரத்யேக பேட்டி
"விருது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு நடிக்கவில்லை" - விஜய் சேதுபதி பிரத்யேக பேட்டி
Published on

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில், மத்திய அரசு வழங்கும் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெறவுள்ளார். போலவே சிறந்த துணை நடிகருக்கான விருது, சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ‘ஷில்பா’ என்ற கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு தரப்படவுள்ளது.

விருதை பெறுவதற்காக நடிகர் விஜய் சேதுபதி டெல்லி சென்றிருந்த நிலையில், அங்கு புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார் அவர். அப்போது பேசுகையில், “விருது பெறுவது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு. அதுவும் ஷில்பாக்காக இந்த விருது கிடைக்கிறதென்பது, இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தியாகராஜன் குமாரராஜாவை மட்டுமே நம்பி, ஷில்பா கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். ஆகவே அவருக்கே இந்த தருணத்தில் என்னுடைய முழு நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஷில்பா கதாபாத்திரம், இந்தளவுக்கு பேசப்படும் - விருது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு நான் ஏற்று நடித்த கதாபாத்திரமில்லை. இயக்குநர் சொன்னார் என்பதற்காக, முழுமையாக அவரை மட்டுமே நம்பி செய்த ஒரு கதாபாத்திரம்தான் அது. அதனாலேயே படம் வெளியானவுடன் மக்கள் அதை எப்படி எடுத்துக்கொண்டர்கள் என பார்க்க ஆவலாய் இருந்தேன். அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே, மிகப்பெரிய நிறைவாக இருந்தது. அவர்களைத் தொடர்ந்து தற்போது ஷில்பாவுக்கு விருது அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி!

தேசிய விருது பெறும் அனுபவம், மிகவும் புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. விருது நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள்கூட நேற்று நடந்தது. ஆகவே இங்கே கூடுதல் நேரம் செலவிட முடிந்தது என்பதால், அந்த நேரத்தில் எல்லா மொழி பேசுபவர்களையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சந்திக்க முடிந்தது. ஒவ்வொருவரின் படங்களையும் மொழிகள் கடந்து நேரடியாக இந்த இடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது. விருது என்பதைவிட, கலைஞர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது. சில வேற்று மொழி கலைஞர்கள் என் படத்தை பார்த்ததாக கூறி பாராட்டியது, இன்னும் மகிழ்ச்சியை கொடுத்தது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com