”சினிமா என்னை விடவில்லை” இயக்குநர் மகேந்திரன் - பிறந்தநாள் ’நினைவு’ பேட்டி!

”சினிமா என்னை விடவில்லை” இயக்குநர் மகேந்திரன் - பிறந்தநாள் ’நினைவு’ பேட்டி!
”சினிமா என்னை விடவில்லை” இயக்குநர் மகேந்திரன் -  பிறந்தநாள் ’நினைவு’ பேட்டி!
Published on

’முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே’ என தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்புகளை கொடுத்த பிரபல இயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாள் இன்று. 2 கே கிட்ஸுகளுக்கு இன்னும் நன்றாக தெரியும்படி சொல்லவேண்டும் என்றால் விஜய் நடித்த  ‘தெறி’ படத்தில் தெறிக்கவிட்ட வில்லன். ரஜினியின்  ‘பேட்ட’, உதயநிதியின்  ‘நிமிர்’ படங்களில் சிறப்பாக நடித்தவர். 2019 ஏப்ரல் 2 -ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இறப்பதற்கு, முன்பு புதிய தலைமுறைக்காக அவரிடம் எடுத்த பேட்டி… அதுவும், சிறுவயதில் என்னவாகவேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்ற கேள்விக்கு,  “இன்னும் சொல்லப்போனால் எப்படி ஆகக்கூடாது என்று நினைத்திருந்தேனோ அப்படி ஆகிவிட்டேன் என்பதுதான் உண்மை” என பட்டென்று மனதில் சட்டென்று சொல்லிவிட்டுப்போகும் எதார்த்தமான பேச்சுக்காரரின் பேட்டி… 

சிறுவயதில் என்னவாகவேண்டும் என்று நினைத்தீர்கள்?

உண்மையில் நான் சிறுவயதில் இப்படியாக வேண்டும், அப்படியாக வேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் எப்படி ஆகக்கூடாது என்று நினைத்திருந்தேனோ அப்படி ஆகிவிட்டேன் என்பதுதான் உண்மை.

அப்படியென்றால், நீங்கள் சினிமாவை நேசிக்கவில்லையா?

ம்ஹூம்… தமிழ் சினிமா மக்களின் எதார்த்தமான வாழ்வை பிரதிபலிக்கவில்லை… ஓவர் ஆக்டிங்… பக்கம் பக்கமான வசனங்கள் என ட்ராமாபோல் இருக்கிறது என்று பள்ளிக்கூடத்தில் படித்தபோதிலிருந்தே  கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தவன் நான். கடைசியில், தமிழ் சினிமாவே என் வாழ்க்கையாகிவிட்டது.

பிறகெப்படி, இவ்வளவு பெரிய இயக்குநர் ஆனீர்கள்?

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அம்மாவுக்கு பணிமாறுதல் ஏற்பட்டதால் அழகப்பா பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்தேன். ‘நாடோடி மன்னன்’ படம் ரிலீஸுக்கு ஒருவாரத்திற்கு முன்பாக, 1958-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் எங்கள் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது, நிறைய நிகழ்ச்சிகளுக்கு செல்லவேண்டும் என்பதால் 1 மணிநேரம் இங்கே இருப்பேன். ஆனால், என்னை பேசச்சொல்லாதீர்கள் என்ற கண்டிஷனோடுதான் மேடையில் அமர்ந்திருந்தார். அதுவும், எம்.ஜி.ஆர்.க்கு எவ்வளவுக் கூட்டம் இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். அக்கம்பக்கத்து ஊர்களிலுள்ள மக்கள் கூட்டமும் கல்லூரி வளாகத்தை திணறடித்துக்கொண்டிருந்தது. அப்போது, தமிழ் நாடகம், தமிழ் இலக்கியம், தமிழ் சினிமா இந்த மூன்று தலைப்புகளில் மூன்று மாணவர்களை ஒவ்வொருவரும் மூன்று நிமிடத்திற்குள் பேசவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். எப்போது பேசுவார் என்று வெறியோடு காத்திருந்த மக்களுக்கு முன்னால் முதலாவது மாணவன் பேச ஆரம்பித்ததுமே மக்கள் கூட்டம் கத்தி கூக்குரலிட்டு அவனை பேசவிடாமல் செய்துவிட்டது. இரண்டாவது, மாணவனுக்கும் அதே நிலைமை. மூன்றாவதாக நான், ‘தமிழ்சினிமா நவரசங்களை உண்மைக்கு மாறாகவும் இயற்கைக்கு எதிராகவும்  சித்தரிக்கிறது. இல்லை என்றால் இத்தனை வயதில் இளம்பெண்களுடன் இவர் டூயட் ஆடமுடியுமா?’ என்று  மேடையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரை கைக்காட்டி பேசியதும் ஒரே கைத்தட்டல். அதுவரை, மாணவர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் திடீரென்று நிமிர்ந்துப் பார்க்க ஆரம்பித்தார். எனக்குக் கொடுக்கப்பட்ட நேரம் மூன்று நிமிடங்கள். ஆனால், நான் பேசியது 45 நிடங்கள். அதற்குக்காரணம், மக்களின் ஆரவாரக் கைதட்டல் மட்டுமல்ல; எம்.ஜி.ஆர். அவர்கள், மேடையில் இருந்துகொண்டு கைதட்டி ரசித்ததோடு மக்களையும் கைதட்டச்சொல்லி உசுப்பேற்றிவிட்டார். பேசிமுடித்ததும் ஒரு பேப்பர் கேட்டார்.  பல்கலைக்கழகத்தின் லெட்டர் பேர்டை கொடுத்தபோது பச்சை மையினால் ஏதோ எனக்கொரு கடிதம் எழுதிக்கொடுத்தார். கையில் அக்கடிதத்தை வாங்கியதுமே ’நான் படிக்கிறேன்… நான் படிக்கிறேன்’ என்று அந்தக் கடிதம் கல்லூரி மாணவர்களின் கைகளுக்கு தாவிக்கொண்டே இருந்தது. கடைசியில், அந்தக் கடிதம் எங்கே போனது என்றே தெரியவில்லை. நானும் அதை மிக ஆர்வமாக தேடவுமில்லை. ஆனால், கல்லூரி முடிந்தபோதுதான் என் நண்பன் ஒருவன் அக்கடிதம் தன்னிடம் இருப்பதாக கொண்டுவந்துக் கொடுத்தான். தமிழ் சினிமாவை நான் விமர்சித்ததை பாராட்டி எம்.ஜி.ஆர். அவர்கள் எழுதிய வாழ்த்துக் கடிதம் அது.

படிப்பு முடித்ததும் ’மேற்படிப்பாக புரஃபஷனல் கோர்ஸ் படிக்கவேண்டும். உனக்கு, எல்லா உதவியையும் செய்கிறேன்’ என்ற எனது அத்தை நேசமணி, சட்டக்கல்வி பயிலவேண்டும் என்று என்னை ஒரு லக்கேஜ்போல் தூக்கிப்போட்டு சென்னை ரயிலுக்குள் திணித்து அனுப்பினார்கள். சட்டக்கல்வி பயின்று கொண்டிருந்த நான் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போதுதான், என்னைப் பார்த்த சி.பி சிற்றரசு என்ற பத்திரிகை ஆசிரியர், ‘நீங்க எம்.ஜி.ஆர். வந்தப்போ கல்லூரியில பேசின மாணவர்தானே? நானும் அப்போ அங்கதான் இருந்தேன். சென்னையில என்ன பண்றீங்க’ன்னு கேட்டார்.

’ஐந்து நிமிடத்திற்கு முன்னால் வரை நான் ஒரு சட்டக்கல்லூரி மாணவன். இப்போது, ஊருக்கு கிளம்பிவிட்டேன்’ என்றேன். ’என்னது ஊருக்கு கிளம்பிட்டீங்களா? ஏன்? அட… அட… சினிமாவை எப்படியெல்லாம் அழகா விமர்சிச்சீங்க? நானும் அந்தக் கூட்டத்தில்தான் இருந்தேன். திமுக ஆதரவு பத்திரிகையான ‘இனமுழக்கம்’ பத்திரிகையில சினிமா விமர்சனம் எழுதுங்க வாங்க’ என்று அழைத்தார்.  கல்லூரி காலங்களிலேயே கையெழுத்து பத்திரிகை எல்லாம் நடத்தியதால் எழுத்தின் மீது காதல் உண்டு. ஆனாலும் நான் வீட்டுக்கு மூத்தப்பிள்ளை. எனக்குப் பிறகு தம்பி, தங்கை என நான்கு பிள்ளைகள். அப்பாவும் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். அம்மாவும் ஓய்வுபெறும் நிலையில் இருந்தார். அதனால், ஏதாவது, சம்பளம் கொடுத்தால் வருகிறேன் என்றபடி இனமுழக்கம் பத்திரிகையில் சினிமா விமர்சனங்களை எழுதிக்கொண்டிருந்தேன்.

ஒருநாள், எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். நான்,  எந்தக்கூட்டத்திற்கு சென்றாலும் எப்போதுமே கூட்டத்தின் கடைசியில்தான் நிற்பேன். அப்படித்தான், நானும் நின்றுகொண்டு குறிப்பெடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தேன். பேசி முடித்த எம்.ஜி.ஆரின் கண்களில் கடைசியில் நின்ற எனது உருவம் பட்டுவிட்டது. கையை காண்பித்து வரவழைத்தார். நானும், எதார்த்தமாகத்தான் சென்றேன். அவரோ, ’கல்லூரியில் பேசிய மாணவர்தானே நீங்கள்? இங்கு, எப்படி?’ என்று கேட்டார். இனமுழக்கம் பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதுவது குறித்துச்சொன்னபோது இன்னும் ஆச்சர்யம் அவருக்கு.

’அட… சினிமா விமர்சனம் எழுதும் அந்த மகேந்திரன் நீங்கள்தானா? நாளைக்கு என்னை வீட்டில் வந்துப் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.   மறுநாள், அவரது வீட்டிற்கு சென்றேன். மாடிக்குச்சென்றபோது தோளில் துண்டுப்போட்டுக்கொண்டு அன்போடு வரவேற்ற எம்.ஜி.ஆர், பொன்னியின் செல்வன் புத்தகத்தொகுப்பைக் கொடுத்து  உங்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. நீங்கள்தான் இதற்கு திரைக்கதை எழுதித்தர வேண்டும் என்றார். நான் ஏற்கனவே, கல்கியில் படித்திருந்தாலும் மறுபடியும் திரைக்கதைக்காக படித்தேன். அப்போது, திரைக்கதை என்றாலே என்னவென்று தெரியாது. ஆனாலும், நானாகவே யோசித்து எழுத ஆரம்பித்தேன்.  இரண்டே மாதத்தில் திரைக்கதை எழுதிக்கொடுத்துவிட்டு  ஊருக்குக் கிளம்பிடவேண்டும் என்ற  எண்ணத்தில் நண்பனின் சைக்கிளை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்றேன். அப்போது, ‘திருடாதே’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் எம்.ஜி.ஆர்.’ இரண்டு மாதத்திலேயே எழுதி முடித்துவிட்டீர்களா’ என்று ஆச்சர்யப்பட்டவர், தனியாக அழைத்துச்சென்று ’வீட்டிலிருந்து பணம் கொடுக்கிறார்களா?’ என்று கேட்டார். ’இன்னும் இல்லை’ என்றேன். ’அடக்கவுடளே! பெரிய பாவத்தைப்பண்ணிட்டேனே’ என்று தலையில் அடித்துக்கொண்டவர், 500 ரூபாய் பணம் எடுத்துவந்துக் கொடுத்தார். அப்போதைய, அதன் மதிப்பு லட்சம்போல.

புதிய வேலை தேடவேண்டும். ஊருக்குச்செல்கிறேன் என்றபோது, ‘ஊருக்குப்போங்க… அம்மா அப்பாவைப் பார்த்துட்டு ஒரு வாரத்துல வந்துடுங்க’ என்றபடி அனுப்பினார். நானும் வந்தேன். அதன்பிறகு, என்னுடைய கதையில் திருச்சியில் நாடகம் நடிப்பதாக இருந்தார். அந்தசமயம், வெள்ளம் வரவே அரங்கேற்றம் பண்ணமுடியாமல் போனது. அதன்பிறகு, அந்த நாடக கதையே எம்.ஜி.ஆருக்கு பிடித்துப்போக ‘வாழ்வே வா’ என்றப்பெயரில் படமாக்கிடலாம் என்றார். நல்லப்படியாக 1 வாரம் ஷூட்டிங் போயிருக்கும். திடீரென்று, பைனான்சியர் இறந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.  சரி, ஊருக்குப்போயி ஏதாவது வேலைப்பார்க்கலாம் என்று நினைத்து ஊருக்குச் சென்றுவிட்டேன். நிறையப்பேர் சென்னையில் இருந்தப்போதே என்னிடம் கதை கேட்பார்கள். அப்படித்தான், நிறையப்படங்களுக்கு முதலில் கதை வசனம் எழுதி இயக்குநரானேன். ஆனால், சினிமாத்துறையை நான் விட்டுவிடவேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்து பல வாய்ப்புகளை தவிர்த்துவந்தேன். சினிமா என்னை விடவில்லை.

ரு திரைக்கதை ஆசிரியராக, இயக்குநராக பிற்காலத்தில் நீங்கள் உருவாக காரணமாக இருந்த நபர்கள் அல்லது திருப்புமுனை சம்பவங்களைச் சொல்லமுடியுமா?

என்னோட அம்மா அற்புதமான ஓவியர். அதைப்பார்த்து பள்ளி நாட்களில் ஓவியத்தின்மீது ஈர்ப்பு வந்துவிட்டது. நான் குறைபிரசவத்தில் பிறந்தவன். அக்கம்பக்கத்தினர் அனைவரும் என்னை ஒருமாதிரி பேசுவார்கள். அவர்கள், அப்படி சொன்னதையே நான் நிறைவாக மாற்றிக்காட்டவேண்டும் என்று நினைத்தேன். எங்கள் முஸ்லிம் உயர்நிலைப்பபள்ளியில் பெரிய நூலகம் இருந்தது. மாணவர்கள் அந்தப்பக்கம் போவது குறைவுதான். ஆனால், நான் மட்டும் தினமும் நூலகத்திற்குச்சென்று நிறைய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அந்த வாசிப்பு பழக்கத்தால்தான் நல்ல சினிமாக்களை என்னால் பின்னாட்களில் எடுக்க முடிந்தது.

 புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அந்தப் படம் இயக்கிய அனுபவம்?

என் விருப்பப்படி அந்தப்படத்தை எடுத்ததால் தான் இன்றும் இந்தியாவின் சிறந்த 100 படங்களில் ஒன்றாக உதிரிப்பூக்கள் திகழ்கிறது. சில கதைகளுக்கு நடிகர்கள் தெரியக்கூடாது. அப்படித்தான், உதிரிப்பூக்கள் கதையும். புதுமுகங்களைத்தான் நடிக்கவைக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். குறிப்பாக, ஹீரோயின் கேரக்டர் என் கதைக்கு ஏற்றதுப்போல இருக்கவேண்டும் என்று நினைத்தேன். முகம், மூக்கு, கண்,  தோற்றம் என அந்த பெண் கேரக்டரை கற்பனை செய்துவைத்திருந்தேன். அதற்காக, பல புதுமுக நடிகைகளை வலைவீசித்தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான், பெங்களூரிலிருந்து நாயகியாக அஸ்வினி கிடைத்தார். என் கதைக்கு எதைத் தேடினேனோ அவை அனைத்தையும் அஸ்வினியிடம் கண்டேன். அவர், மட்டும் இல்லையென்றால் உதிரிப்பூக்களை எடுத்திருக்கவே மாட்டேன்.

‘உதிரிப்பூக்கள்’ இறுதிக் காட்சியைப் படமாக்கிய அனுபவத்தைச் சொல்லமுடியுமா? 

ஒரு படத்தில் பார்வையாளர்கள் ஐக்கியமாகவேண்டும் என்றால் இயக்குனரும் ஐக்கியமாகவேண்டும். அப்போதுதான், படம் சிறப்பாக வரும். உணர்வுப்பூர்வமாக அந்த இறுதிக்காட்சியை எடுத்தேன். அந்த சீன் எடுக்கும்போது மனதுக்கு தொந்தரவாக இருந்தது. இரு குழந்தைகள் தேடி வரும்படிதான் கடைசியில் முடிப்பேன். அந்தக்காட்சியை படமாக்கும்போது என்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதை, யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக தூரமாக எங்கோ செல்வதுப்போல் சென்று அழுதுவிட்டு வந்தேன். ஒரு காட்சியை படமாக்கும்போது என்னை சந்தோஷப்பட வைக்கிறதா? என்னை கலங்க வைக்கிறதா என்பதையெல்லாம் பார்ப்பேன்.

2006 ஆம் ஆண்டு ‘சாசனம்’ வெளியானது. அதன்பின்னர், நீங்கள் படங்களே இயக்கவில்லை, ஏன்?

நான், கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவன். எப்போது வேண்டுமென்றாலும் எழுந்துச்செல்வேன்; திரும்பி வருவேன். ஒரு திரைப்படக்கல்லூரியில் தற்போது ஹெச்.ஓ.டியாக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். சரியான சந்தர்ப்பம் அமைந்து அதற்கேற்றவாறு தயாரிப்பாளரும் கிடைத்தால் நிச்சயம் வருவேன். அதேப்போல் யாரிடமும் சென்று இதுவரை நான் வாய்ப்பு கேட்டதே இல்லை. கேட்கவும் மாட்டேன். எல்லாம் என்னை தேடிவந்த வாய்ப்புகள்தான்.

 பல நடிகர்களை இயக்கியவர் நீங்கள். ‘தெறி’ படப்பிடிப்பில் ஒரு நடிகராக இன்னொரு இயக்குநருக்கு முன்னால் நிற்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்?

நடிக்காமல் நடிக்கவேண்டும் என்று நினைத்து நடித்தேன். இதற்கு, நான் நடிகர் விஜய்க்குதான் நன்றி சொல்லவேண்டும். அவர், கேட்டுக்கொண்டதற்காகத்தான் தெறி படத்தில் நடித்தேன்.

உங்கள் முதல் படம் துவங்கி, அநேகமான உங்கள் படங்களில் நடித்துள்ளவர் சரத்பாபுதான். அவரை ஏன் நீங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினீர்கள்?

இது ஒரு குற்றமா? எத்தனையோப்பேரை நாம் பார்க்கிறோம். ஆனால், யாராவது ஒருவருடன்தான் நெருக்கமாக இருக்கிறோம். அப்படித்தான் சரத்பாபுவும். என் கதைகளில் கேரக்டர்களுக்கு தகுந்தமாதிரி இருந்தார். அதனால் தான் அவரை செலெக்ட் பண்ணினேன்.

ரஜினியின் பிரபல ஸ்டைல் போஸ்கள் பலவற்றில் உங்கள் பாதிப்பு உண்டு என்பார்கள். உங்களுக்கு இந்த ஸ்டைல் யாரிடம் இருந்து வந்தது?

(ஹாஹ்…ஹாஹ்…ஹாஹ்..ஹாஹ்ஹா ரஜினி ஸ்டைலில் சிரித்துக்கொண்டே) பேசும் அழகா? நான் எங்கே அழகா பேசுகிறேன்? கடந்த 40 வருடமாக நான் எங்குச்சென்றாலும், யாரிடம் பேசினாலும் என்னிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி இதுதான். பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீர்னு ‘சார் நீங்க பேசுறது அப்படியே ரஜினி மாதிரியே இருக்கு’ சார்ன்னு சொல்லுவாங்க. ரைட் ரைட் கிழிஞ்சதுப்போ ன்னுன்னு நினைச்சுக்குவேன். என்னை இயல்பா இருக்க விடமாட்டார்கள்போல. அதேப்போல் வகுப்பில் மாணவர்கள் ’ரஜினி மாதிரியே பேசுறீங்க’ சார்ன்னு சொல்வாங்க. ‘நான் க்ளாஸ் நடத்தவா வேணாமான்னு கேட்பேன். அமைதியாகிடுவாங்க. ’அது என்னுடைய பாடி லாங்வேஜ்’.

முள்ளும் மலரும் ரஜினிக்கும் தற்போதைய ரஜினிக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

அப்போது, எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியேதான் இருக்கிறார். மிகச்சிறந்த நடிகர். அவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தங்கப்பதக்கம், நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்காரப்பிள்ளை என்று நான் சினிமாவில் கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த காலம் அது. முக்தா ஃபிலிம்ஸ்க்காக முக்தா சீனிவாசன் என்னிடம் கதை கேட்டிருந்தார். அண்ணன் தங்கை கதை இருக்கிறது என்று ஒன்லைன் மட்டும்தான் சொன்னேன். அவர்களுக்கு பிடித்திருந்ததோடு நீங்களே இயக்கிவிடுங்களேன் என்றார்கள். மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் முள்ளும் மலரும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். யாரை அண்ணனாக போடுவது என்ற கேள்வி எழுந்தப்போது நான் ரஜினி பெயரை உச்சரித்தேன். ஆடுபுலி ஆட்டம் கதை வசனம் எழுதியபோது ரஜினிக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. அப்போதே  கர்நாடக படங்கள், பெங்காலி படங்கள் பற்றியெல்லாம் அதிகம் பேசுவோம். அவர் பெயரை சொன்னதுமே முகம் சுளித்து ‘அய்யோ அவனா? அவன் கருப்பா இருக்கானே வேற யாரையாவது அண்ணன் கேரக்டருக்கு போடுங்க’ என்றார்கள்.

எனக்கு படத்தை இயக்க முழு சுதந்திரம் வேண்டும். உங்களுக்கு படம் இயக்க நான் நட்பு ரீதியாகத்தான் ஒப்புக்கொண்டுள்ளேன். என் முடிவில் தலையிடவேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி படத்தையும் இயக்கி முடித்துவிட்டேன். ரீ-ரெக்கார்டிங் முன்பு படம் பார்த்துவிட்டு என்னிடம் ஓடி வந்த தயாரிப்பாளர் ‘என் வாழ்க்கையில மண்ணைவாரிப் போட்டுட்டியே’ என்றார். காரணம், படம் அவருக்கு பிடிக்கவில்லை. அதன்பின், ரெக்கார்டிங் எல்லாம் முடித்து படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானதும், அதே தயாரிப்பாளர் ஓடிவந்து ’உன்னை நான் தப்பா பேசிட்டேனே’ என்று வருத்தம் தெரிவித்து எனக்கு பேங்க் செக் கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள் என்றார். நான், அதை தவிர்த்துவிட்டேன். எனக்கு பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. அதேப்போல், என்னுடைய படங்களில் யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக எடுக்கப்பட்ட படங்கள் தான் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கின்றன.

-வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com