’இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி ’பட விவகாரத்தை சுமூகமாக முடிக்க நடிகர் வடிவேலு இறங்கி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த படம், ’இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை டைரக்டர் ஷங்கர் தயாரித் திருந்தார். இதன் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் தயாரிக்க திட்டமிட்டார் ஷங்கர். இதில் ஹீரோவாக நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்குவதாக இருந்தது. இதற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் ’செட்’ அமைத் து இருந்தனர்.
ஆனால் படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்தார். இதனால் படத்துக்காகக் போடப்பட்ட செட் வீணானது. இதையடுத்து வடிவேலு மீது டைரக்டர் ஷங்கர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். நடிகர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கம் இதுபற்றி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது. பிறகு, ’படத்தில் நடிக்க வேண்டும். இல்லை என்றால் படத்துக்காக செலவழித்த தொகையை (சுமார் 9 கோடி) திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியது. இதை முதலில் மறுத்து வந்த வடிவேலு, பிறகு நடிக்கச் சம்மதித்தார்!
இந்நிலையில் இந்தப் பிரச்னை பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம், ‘இன்னும் இரண்டு கோடி ரூபாய் வாங்கிக் கொடுங்க, நடிக்கிறேன்’ என்றாராம் வடிவேலு. இதை ஏற்றுக்கொள்ளாத தயாரிப்பாளர் சங்கம் அவருக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி அவரை படங்களில் பயன்படுத்த வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது.
அதிகாரபூர்வமற்ற இந்த வாய்மொழி தடை காரணமாக சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருந்த படமும் வடிவேலு நடிக்க இன்னொரு பட மும் கைவிடப்பட்டது. பட வாய்ப்புகள் பறிபோனதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் வடிவேலு, இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மீண்டும் இறங்கி வந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் தயாரிப்பாளர் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறது.