சட்டவிரோதமாக ‘2.0’ டீசர் வெளியிடப்பட்டது இதயமற்ற செயல் என்று இயக்குநரும் ரஜினிகாந்தின் மகளுமான சவுந்தர்யா கூறியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் 2.0. இதன் கிராஃபிக்ஸ் காட்சிகள் இன்னும் முடிவடையவில்லை. ஹாலிவுட் தரத்தில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் விஎஃப்எக்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திடீர்ரென்று ‘2.0’டீசர் லீக் ஆனது. ஆனால் அதன் வடிவமைப்பு தரமாக இல்லை. வேலைகள் முடிவதற்கு முன்பே அதன் வடிவம் வெளியாகி இருக்கலாம் என கூறப்பட்டது. இந்தச் செயலால் ‘2.0’ படக்குழு அதிருப்தியில் உள்ளது.
இந்தச் சட்டவிரோதமான நடவடிக்கை குறித்து ட்விட்டரில் காட்டமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த். அதில் “ஷங்கரின் ‘2.0’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னதாகவே திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றப்பட்டது என்பது சகித்துக் கொள்ள முடியாதது. ஒருசில நொடி உற்சாகத்துக்காக திரைப்படத்தை உருவாக்குபவர்களின் கடின உழைப்பையும், உணர்வுகளையும் சீரழிக்கும் இதயமற்றச் செயலாகும். டிஜிட்டல் மீடியாவை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.