ட்விட்டருக்கு அஜித் வர வேண்டுமென்று ட்விட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மேலாளர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமான ட்விட்டர், சினிமா அப்டேட்டுக்கு பெரிய ஊடகமாகவே உள்ளது. ட்ரெய்லர் வெளியீடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு என சினிமா அப்டேட் தினம் தினம் ட்விட்டரில் வந்த வண்ணம் உள்ளன. திரையுலகைச் சேர்ந்தவர்களும் ட்விட்டரையே படத்தின் விளம்பரத்துக்கும், அப்டேட் கொடுப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
பெரிய நடிகர்களின் ரசிகர்கள் ட்விட்டரில் சண்டையிட்டுக்கொள்வதும் அரங்கேறி வருகிறது. தினம் தினம் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு தங்கள் நடிகர்களை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். சில நேரங்களில் ரசிகர்களின் ஹேஷ்டேக் சண்டை, முகம் சுழிக்கும் அளவுக்கும் சென்றுவிடுவதுண்டு.
குறிப்பாக விஜய்-அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் அதகளம் செய்வார்கள். ஆனால் அஜித் விஜய் இருவருமே ட்விட்டரில் இல்லை. விஜய் பெயரில் ட்விட்டர் கணக்கு இருந்தாலும், அது அவரது அலுவலகம் சார்ந்தே இயங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை.
இந்நிலையில் 2019-ம் ஆண்டின் ட்விட்டர் ட்ரெண்டிங் தொடர்பாக ட்விட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மேலாளர் செரில் ஆன் கூட்டோ, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியொன்றை அளித்தார். அவரிடம் ட்விட்டர் தொடர்பாக அஜித்தை என்றாவது ட்விட்டர் இந்தியா அணுகியதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''ட்விட்டருக்கு அஜித் வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக அவரது படங்களை ரசிகர்கள் எந்த அளவுக்கு கொண்டாடுகிறார்கள் என்பதை அறிய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.