’பாஜகவில் இருந்து சத்ருகன் சின்கா எப்போதோ விலகியிருக்க வேண்டும்’ என்று அவரது மகளும் நடிகையுமான சோனாக்ஷி சின்கா தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம், பாட்னா சாகிப் தொகுதி பா.ஜ.க எம்.பி. சத்ருகன் சின்கா. முன்னாள் மத்திய அமைச்சரான இவர், கட்சியில் இருந்துகொண்டே பிரதமர் மோடியையும், கட்சி தலைமை யையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதையடுத்து அவரை ஓரங்கட்ட நினைத்த பாஜக, பாட்னா சாகிப் தொகுதியை, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அறிவித்தது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் சத்ருகன் சின்கா. ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி அந்தக் கட்சியில் சேர இருக்கிறார்.
இந்நிலையில் அவர் மகளும் பிரபல இந்தி நடிகையுமான சோனாக்ஷி சின்காவிடம், சத்ருகன் சின்கா பாஜகவில் இருந்து விலகியது பற்றி கேட்டபோது, ‘அப்பா எப்போதோ கட்சியில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஜே.பி.நாராயண், அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி ஆகிய தலைவர்கள் இருந்தபோது, அப்பாவுக்கு மரியாதை இருந்தது.
அவருக்கு தகுந்த மரியாதையை இப்போதிருக்கும் தலைவர்கள் தரவில்லை. அதனால் கட்சியில் இருந்து எப்போதோ அவர் விலகியிருக்க வேண்டும். காலதாமதம் செய்துவிட்டார் என நினைக்கிறேன்’’ என்றார். சோனாக்ஷி, தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ’லிங்கா’ படத்தில் நடித்தவர்.