‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓப்ராய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிஎம் நரேந்திர மோடி’. இப்படத்தில் விவேக் ஓப்ராய் பிரதமர் மோடியின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தை சந்தீப் சிங், ஆனந்த் பண்டிட் மற்றும் சுரேஷ் ஓப்ராய் தயாரிக்கின்றனர். இந்தப் படம் மோடியின் கடந்த கால வாழ்க்கையில் தொடங்கி அவர் குஜராத் முதல்வராகவும், பின்னர் 2014 தேர்தலில் இந்திய பிரதமராகும் வரையுள்ள நிகழ்வுகளை கொண்டுள்ளது. இந்தப் படத்தை ஜனவரி 7ஆம் தேதி மகாரஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கிவைத்தார்.
இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 28ஆம் தேதி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லரின் தொடக்கத்தில் 2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் படங்கள் காட்டப்படுகின்றன. அதன்பிறகு இளைஞராக மோடி தனது தாயிடம் சன்னியாசம் போவதாக கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதன்பின்னர் அவர் இமய மலைகளில் இருக்கும் ஆன்மிக பெரியவர்களிடம் சில வருடங்கள் இருந்துவிட்டு பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்வது போல காட்சிகள் வருகின்றன.
மேலும் இந்த டிரெய்லரில் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக எவ்வாறு அக்ஷர்தம் கோவிலில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கையாண்டார் என்பது குறித்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்திரா காந்தி மற்றும் இந்தியாவில் இருந்த அவசர காலநிலையும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. மொத்தமாக 2 நிமிடம் 35 விநாடிகள் அடங்கிய இந்த டிரெய்லரின் இறுதியில் மோடியாக நடித்துள்ள விவேக் ஓப்ராய் பாகிஸ்தானை எச்சரிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் ஸரினா வாஹாப் மோடியின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பர்கா பிஸ்ட் மோடியின் மனைவியாக இப்படத்தில் நடிக்கிறார். மேலும் அமித் ஷா கதாபாத்திரத்தில் மனோஜ் ஜோசி நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.