‘மாஸ்..பக்கா மாஸ்’ - காஞ்சனா-3 எப்படி இருக்கு?

‘மாஸ்..பக்கா மாஸ்’ - காஞ்சனா-3 எப்படி இருக்கு?
‘மாஸ்..பக்கா மாஸ்’ - காஞ்சனா-3  எப்படி இருக்கு?
Published on

பயந்தாங்கொள்ளி லாரன்ஸ், அம்மா கோவை சரளா, அண்ணன் ஸ்ரீமன், அண்ணி தேவதர்சினி, அண்ணன் மகள் சேர்ந்து வாழும் குடும்பத்தை பற்றிய கதைதான் ‘காஞ்சனா3’. லாரன்சினுடைய தாத்தாவின் 60 ஆவது கல்யாணத்துக்கு குடும்பத்துடன் ஊருக்கு போகிறார்கள் அவரது குடும்பத்தினர். போகும் வழியில் சாப்பிட இறங்குகிறார்கள். அப்போது, சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. 

பிறகு அங்கிருந்து எல்லோரும் பயந்து ஓடிவிடுகிறார்கள். வீட்டுக்குப் போனதும் ஒவ்வொருவரையும் மாற்றிமாற்றி பேய் ஆட்டம் காட்டுகிறது. அடுத்து குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் வீட்டில் பேய் இருப்பதாக உணருகிறார்கள். அது யார் உடம்புக்குள்ள போகிறது?, ஏன் அது கொலவெறியில் இருக்கிறது எனப் பார்ப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது படம். பயம், கிளாமர், காமெடி, ஆக்சன் எல்லாம் கலந்த மசாலாவாக கதை நகர்கிறது.

‘காஞ்சனா-1’ சத்தமாகவும், அடுத்து ‘காஞ்சனா-2’ அதிக சத்தமாகவும், ‘காஞ்சனா-3’ ரொம்ப அதிக சத்தமாகவும், காது கிழியும் அளவுக்கும் இருக்கிறது. படத்தை பொருத்தவரைக்கு கொஞ்சம் ரொமான்ஸ் அதிகம். லாரன்ஸின் மாமன் மகள்களான ஓவியா, வேதிகா, நிக்கி இந்த மூன்று பேரும் அதிகம் வழிந்து தள்ளுகிறார்கள். இந்த கிளாமரை எத்தனை பேர் ரசிப்பார்கள்என்பது தெரியாது. ஆனால் கிளாமர் குயின்களை பேய் அடித்ததற்கு பின் கொஞ்சம் நல்ல உடைகளை அணிய கற்றுக் கொள்கிறார்கள்.

கோவை சரளா, ஸ்ரீமன் மற்றும் தேவதர்சினி ஆகியோரின் ஒட்டுமொத்த நடிப்பும்தான் படத்தின் காமெடிக்கு கைகொடுக்கிறது. அது லாரன்சுக்கும் புரிந்துள்ளது. மொத்தம் 20 நிமிடம் இவர்களின் பயம் கலந்த காமெடி பெரியவர் முதல் சிறியவர் வரை சிரிக்கும்படி உள்ளது. இதே போல் பயமுறுத்தும் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. அடுத்தபடியாக கண்கலங்க வைக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் உள்ளன. ப்ளாஷ்பேக், உணர்ச்சிப்பூர்வமான வகையில் அமைந்துள்ளது. 

தொழில்நுட்பமாக பார்த்தால், பயம் கொஞ்சம், நகைச்சுவை கொஞ்சம், பயம் கலந்த காமெடி கொஞ்சம், கிளாமர் கொஞ்சம், ஆக்சன் கொஞ்சம் சவுண்ட் கொஞ்சம் இவை எல்லாம் இருக்க வேண்டுமென முடிவு செய்த லாரன்ஸ் அதை கோர்வையாக கொடுக்க தவறிவிட்டார். படத்தில் சில காட்சிகள் ஒட்டாமல் உள்ளது. சீன் டூ சீன் அனைத்தும் ஒரே குளறுபடி.

க்ளைமேக்சில் தான் லாரன்ஸ் இரு வேடங்களில் நடித்துள்ளார் எனத் தெரிய வருகிறது. வழக்கம் போல் ஒரு வேடத்தில் வெகுளியான லாரன்ஸ். மற்றொரு வேடத்தில் மாஸ் ஆன லாரன்ஸ். வெகுளி லாரன்ஸ் பலரையும் ஈர்க்கிறார். வேதிகாவின் நடிப்பு ரசிக்கும்படி வேடிக்கையாக உள்ளது. 

ப்ளாஷ்பேக்கில் வரும் லாரன்சின் மரணம், அதற்கான காரணம், அவர் செய்கின்ற விசயம் அனைத்துமே சரியாக சொல்லப்படவில்லை. ஆகவே பார்வையாளர்களால் அதிகம் ஒன்றிப்போக முடியவில்லை. பாடலும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாகவே இருந்தாலும், சற்று சிறியவர்களை மனதில் கொண்டு சப்தத்தின் அளவை குறைத்திருக்கலாம். அதேபோல் வன்முறைக் காட்சிகளையும் சற்று குறைத்திருக்கலாம். கோடை ஸ்பெஷல் ‘காஞ்சனா-3’ மாஸ் ஆனால் பக்கா மாஸ் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com