’கான் பட விழா, ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி, பெண்களை வேட்டையாடும் களமாக இருந்தது’ என்று இத்தாலி நடிகை பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.
ஆஸ்கர் விருது வென்ற புகழ் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவர்களுடன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட் டது. பிறகு பிரபல ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, காரா டெலவிங்னி உள்பட பல நடிகைகள் பலர், வெயின்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்தனர். சுமார் 80 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர்.
இதற்காக, சமூக வலைத்தளங்களில் #Metoo என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இதில் ஏராளமான நடிகைகள், தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தாலி நடிகை ஆசியா அர்ஜென்டோ, தானும் ஹார்வி வெயின்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கான் பட விழாவின் கடைசி நாளில் ஏகப்பட்ட கைதட்டல்களுக்கு இடையே நடந்து சென்ற அவர் பின்னர் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, ‘நான் சில வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். 1997-ம் ஆண்டு இங்கு வந்திருந்தபோது ஹார்வி வெயின்ஸ்டீனால் நான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன். அப்போது எனக்கு 21 வயது. இந்த திரைப்பட விழா அவரது வேட்டையாடும் களமாக இருந்தது. இதை நான் உரத்து கூறுகிறேன்’ என்று தெரிவித்தார். இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆனால், இந்தப் புகாரை வழக்கம் போல மறுத்துள்ளார் ஹார்வி வெயின்ஸ்டீன்.