பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூவின் ரசிகர் என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஜோஜு ஜார்ஜ் கூறும்போது, “ நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மிகப்பெரிய ரசிகன். “பீட்சா” படம் பார்த்துவிட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை. மலையாளத்தில் பிரபலமாக தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத்தொடங்கின.
இறுதியாக இந்தப்படத்தின் எடிட்டர் டிமல் டென்னிஸ் மற்றும் விவேக் ஹர்ஷன் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை சந்தித்தேன். இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்தார் கார்த்திக். படத்தில் மிகப்பெரிய பாத்திரம் என்பதால் என்னிடம் ஒரு காட்சியை விவரித்து, நடித்து காட்ட சொன்னார். எனக்கு தெரிந்த அரைகுறை தமிழில், நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். ஆனால் அவர் என்னை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.” என்றார்.
மேலும் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ குறித்து கூறும்போது, “படத்தில் என் எதிர் பாத்திரமாக நடிப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்
காஸ்மோ என்பது எனக்கு தெரியும். நான் நேரில் சந்தித்த முதல் ஹாலிவுட் நடிகர் அவர்தான். வாழ்க்கை தரும் ஆச்சர்யங்கள் பெரும்
சந்தோஷமாக இருக்கிறது. நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடன் நடிப்பது மிகப்பெரும் பெருமை” என்றார்.
முன்னதாக, தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் தனுஷூடன் இணைந்து பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாத்தில் ‘ஜோசப்’, ’நாயட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்ததின் மூலம் கவனம் பெற்றவர் ஜோஜு ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணனின் இசையில் அண்மையில் இந்தப் படத்தின் பாடல்கள அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றது கவனிக்கத்தக்கது.