’கவுர்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதா? சன்னி லியோனுக்கு கடும் எதிர்ப்பு!
நடிகை சன்னி லியோன் ’கவுர்’ என்ற பயன்படுத்தக் கூடாது என்றும் பயன்படுத்தியதற்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீக்கிய அமைப்புகள் கூறியுள்ளன.
உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இப்போது இந்தி படங்களில் நடித்து வரும் அவர், தமிழில் ’வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது ’வீரமாதேவி’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் பாலியல் நடிகையாக இருந்தவர் இவர். சன்னியின் இயற்பெயர், கரன்ஜித் கவுர் வோரா. அவர் பல்வேறு போராட்டங்களை சந்தித்து முன்னேறியுள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றுக் கதை, சேனல் ஒன்றின் வெப்சைட்டில் தொடராக ஒளிபரப்பாக இருக்கிறது. 'கரன்ஜித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' எனும் தலைப்பிடப்பட்டுள்ள இந்த தொடர் 16-ம் தேதி முதல் வெளியாகிறது.
இந்நிலையில், ‘கவுர்’ என்ற பெயரை சன்னி லியோன் பயன்படுத்த சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியும் சீக்கிய பெண்கள் அமைப்பும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர், தில்ஜித் சிங் பேடி கூறும்போது, ‘சீக்கிய குருவால் சீக்கிய பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையான பெயர், கவுர். சீக்கிய குருவின் போதனைகளைப் பின்பற்றாத யாரும் இதை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. அப்படி பயன்படுத்தினால் அது சீக்கிய மத உணர்வை புண்படுத்தும். சன்னி லியோன் இந்தப் பெயரை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதற்காக அவர் பொது மன் னிப்புக் கேட்க வேண்டும்’ என்றார்.