அலுவலக கேன்டீனில் மெனு கார்டைப் பார்க்க முடியாமல் ஏற்பட்ட சிரமத்தை சரி செய்ய, ஊழியர்கள் அனைவரும் தங்கள் இன்ட்ராநெட்டில் மெனு கார்டை பார்க்க ஏற்பாடு செய்ததில் தொடங்குகிறது சொமேட்டோவின் கதை.
2008-ம் ஆண்டு Foodiebay என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், முதலில் மெனுகார்டுகளை மட்டும் ஒரு வலைதளத்தில் பதிவேற்றியது. பிறகு உணவை ரேட்டிங் செய்யும் வசதியைக் கொண்டு வந்தது. பின், உணவகங்களிலிருந்து வாடிக்கையாளர்களின் வீடு / அலுவலகங்களுக்கு உணவை டெலிவரி செய்யத் தொடங்கியது.
2010-ம் ஆண்டில் தன் பெயரை சொமேட்டோ என மாற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக டப்பாவாலாக்கள் செய்து வந்த தொழிலை, டெக்னாலஜி மூலம் வேகப்படுத்தியது சொமேட்டோ. இன்று கிட்டத்தட்ட 24 நாடுகளில் சுமார் 1,000 நகரங்களில் சொமேட்டோ உணவை டெலிவரி செய்கிறது.
பங்கு விலை வீழ்ச்சி
சொமேட்டொ நிறுவனம் கடந்த ஜூலை 2021ல் ஐபிஓ வெளியிட்டது. ஒரு பங்கின் விலை சுமார் 72 - 76 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சொமேட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தேசிய பங்குச் சந்தையில் 116 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. இது சுமார் 53 சதவீத விலை ஏற்றம்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 2021 காலத்தில் தன் வாழ்நாள் உச்சமாக 169 ரூபாயைத் தொட்டது. அதன் பிறகு தொடர் சரிவுகளால் ஜூலை 27ஆம் தேதி மாலை 41.60 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. தன் வாழ்நாளின் மிக மோசமான விலையாக 41.20 ரூபாயைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. வாழ்நாள் உச்சவிலையிலிருந்து சுமார் 75 சதவீத சரிவு இது.
சொமேட்டோ எப்படி பணம் சம்பாதிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால், அதன் சரமாரி சரிவைப் புரிந்து கொள்ள கொஞ்சம் வசதியாக இருக்கும்.
சொமேட்டோ சம்பாதிப்பது எப்படி?
உணவு டெலிவரி கமிஷன், உணவகங்களிலிருந்து வரும் கமிஷன், உணவகங்களின் விளம்பரக் கட்டணம் போன்றவைகள்தான் இதன் முக்கிய வருவாய் மூலங்கள். கடந்த 2021 - 22 நிதியாண்டின் உணவு டெலிவரி வியாபாரத்தில் இருந்து மட்டும் 4,760 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. இது ஒட்டுமொத்த 5,540 கோடி வருவாயில் சுமார் 86 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஹைப்பர் ப்யூர் என்கிற பெயரில் ஆர்கானிக் விவசாயப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உணவு விடுதிகளுக்கு விற்று வருகிறது. இவர்களிடமிருந்து ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்களுக்கு 'Hyperpure Inside' என பிரத்யேகமாக தன் செயலியில் விளம்பரப்படுத்துகிறது. இந்த ஹைபர் ப்யூர் மூலம் 2021 - 22 நிதியாண்டில் சுமார் 540 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது போக 'சொமேட்டோ ப்ரோ' டைனிங் வழியாகவும் கொஞ்சம் காசு பார்க்கிறது.
ஆதாரம்: Q4FY 22 Shareholders' Letter and Results
வியாபாரம் எப்படி
சொமேட்டோவின் ஆர்டர் எணிக்கை 2021 - 22 நிதியாண்டில் 53.5 கோடி என புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மொத்தர் ஆர்டர் மதிப்பும் சுமார் 21,300 கோடி ரூபாய் என பெரும் பாய்ச்சலைக் கண்டிருக்கிறது. ஆனால், சராசரி ஆர்டர் மதிப்பு கடந்த 2020 - 21 நிதியாண்டில் 397ரூபாயாக இருந்தது, இந்த 2021 - 22 நிதியாண்டின் ஒரு ரூபாய் மட்டுமே அதிகரித்திருக்கிறது. சராசரியாக ஆர்டர் செய்யும் ஆக்டிவ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஆக்டிவ் டெலிவரிதாரர்களின் எண்ணிக்கை எல்லாம் அதிகரித்திருக்கிறது.
அடிப்படைப் பிரச்சனை
வரவை விட செலவு மிக அதிகமாக இருந்தால் எப்பேற்பட்ட தாதாவாக இருந்தாலும் ஒருநாள் வீழ்வார். அது சொமேட்டோவுக்கும் பொருந்திப் போகிறது.
சொமேட்டோ நிறுவனத்தின் வருவாய்
2020 - 21 = 2,118.4 கோடி ரூபாய்
2021 - 22 = 4,687.3 கோடி ரூபாய்
சொமேட்டோ நிறுவனத்தின் மொத்த செலவுகள்
2020 - 21 = 2,608.8 கோடி ரூபாய் (நஷ்டம் 822 கோடி)
2021 - 22 = 6,205.5 கோடி ரூபாய் (நஷ்டம் 1,220 கோடி)
ஆதாரம்: Zomato Limited, Statement of unaudited consolidated Financial results
எங்கே செல்லும் இந்த பாதை..?
கடந்த ஏப்ரல் 2020 காலத்தில் மளிகை சாமான் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரி வியாபாரத்தில் குதித்தது சொமேட்டோ. ஜூன் 2020 காலத்திலேயே அதிலிருந்து வெளியேறியது. மீண்டும் ஜூலை 2021 காலத்தில் மளிகை சாமான்களை கையில் எடுத்து, செப்டம்பர் 2021 காலத்தில் வெளியேறியது. கடந்த மே 2020 காலத்தில் இந்தியாவின் சில மாநிலங்களில் மதுபானங்களை டெலிவரி செய்யும் வியாபாரத்தை கையில் எடுத்து ஏப்ரல் 2021 காலத்தில் மூடியது.
சமீபத்தில், சொமேட்டோ நிறுவன பங்குகளைக் கொடுத்து 'பிளிங்க் இட்' மளிகை சாமான் டெலிவரி செய்யும் குவிக் காமர்ஸ் நிறுவனத்தை முழுமையாக வாங்கியுள்ளது.
வங்கி அல்லாத நிதி நிறுவன உரிமத்துக்கு சொமேட்டோ விண்ணப்பித்திருக்கிறது. ஆனால் அது குறித்து சில முதலீட்டாளர்கள் மற்றும் பட்டையக் கணக்காளர்கள் கேள்வி எழுப்பிய போது சொமேட்டோ தரப்பிலிருந்து சரியான பதில் வரவில்லை. சொமேட்டோவுக்கும் நிதி நிறுவன உரிமத்துக்கும் என்ன தொடர்பு..? நல்ல யோசனை என்றால் கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்காமல் புறக்கணிப்பது ஏன்?
இதுபோன்ற விஷயங்கள் சொமேட்டோ கப்பலின் கேப்டன் குழப்பத்தில் இருக்கிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கடன் கொடுத்தவனே, அக்கடனை வாங்கிக் கொள்வது
2021 - 22 நிதியாண்டிலேயே குரோஃபர்ஸ் (பிளிங்க் இட்) நிறுவனத்தில் சுமார் 9.16% பங்குகளை வாங்கியது சொமேட்டோ. அதன் பின் பிளிங்க் இட்டுக்கு சுமார் 1,100 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. 2022ஆம் ஆண்டில் பிளிங்க் இட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம், அந்த 1,100 கோடி ரூபாய் கடனையும் சேர்த்து வாங்கியுள்ளது சொமேட்டோ. இவர்கள் வைத்த வெடிகுண்டை இவர்களே செயலிழக்கச் செய்வது போலிருக்கிறதல்லவா..?
பிளிங் இட்டை சொமேட்டோ வாங்கியது, பங்குச் சந்தைகளில் ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. போதாக்குறைக்கு அடுத்த 18 மாதங்களில், பிளிங்க் இட் நிறுவனத்தில், சொமேட்டோ சுமார் 1,875 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக கூறியுள்ளதாக, இந்தியாவின் பிரபல பட்டையக் கணக்காளர் ரச்னா ரானடே தன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோடிக் கணக்கில் நஷ்டத்தில் மிதந்து கொண்டிருக்கும் சொமேட்டோ, தன்னைப் போல நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வதை எந்த பங்குதாரரால் பொறுத்துக் கொள்ள முடியும். தன் நிறுவனத்தையே லாபகரமாக மாற்றத்தெரியாத நிறுவனம், எப்படி மற்றொரு நிறுவனத்தை லாபத்துக்குக் கொண்டு வரும்? ஆகையால் தான் சொமேட்டோ பங்குகளை விற்று வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.
- கெளதம்