நிறுவனர்களின் சம்பளம் ரூ.100 கோடி; பணியாளர்களுக்கும் பங்குகள்... கவனம் ஈர்க்கும் 'ஜெரோதா'!

நிறுவனர்களின் சம்பளம் ரூ.100 கோடி; பணியாளர்களுக்கும் பங்குகள்... கவனம் ஈர்க்கும் 'ஜெரோதா'!
நிறுவனர்களின் சம்பளம் ரூ.100 கோடி; பணியாளர்களுக்கும் பங்குகள்... கவனம் ஈர்க்கும் 'ஜெரோதா'!
Published on

இந்தியாவின் மிகப்பெரிய புரோக்கரேஜ் நிறுவனம் ஜெரோதா. இந்த நிறுவனத்துடம் 50 லட்சத்துக்கு மேலே பயனாளர்கள் உள்ளனர். புரோக்கிங் துறையில் நடக்கும் மொத்த பரிவர்த்தனையில் 15 சதவீதம் அளவுக்கு ஜெரோதா வசம் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அசுர வளர்ச்சியை அடைந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், இதுதான்.

பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில், 'வென்ச்சர் கேபிடல்' அல்லது 'பிரைவேட் ஈக்விட்டி' ஆகியவை முதலீட்டை பெற்றே வளர்ச்சியை அடைந்திருக்கும். ஆனால், ஜெரோதா நிறுவனத்தில் வெளியில் இருந்து முதலீட்டாளர்கள் என யாரும் கிடையாது. தவிர, இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 கோடி டாலருக்கு மேலே இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. 2020-ம் நிதி ஆண்டில் ரூ.1000 கோடி வருமானத்தை பெற்றிருக்கிறது. நிகர லாபம் 442 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனம் லாபத்தில் இருப்பது மட்டுமல்லாமல், கடன் இல்லாமலும் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், நிறுவனர்கள் நிதின் காமத், நிகில் காமத் மற்றும் முழு நேர இயக்குநர் சீமா பாட்டீல் (நிதின் காமத் மனைவி) ஆகியோரின் ஆண்டு சம்பளம் தலா ரூ100 கோடியாக இயக்குநர் குழு நிர்ணயம் செய்திருக்கிறது.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைவர்களில் சன் டிவி நிறுவனத்தின் கலாநிதி மாறன் மற்றும் அவரின் மனைவி காவேரி மாறன் ஆகியோர் தலா ரூ.88 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருந்தார்கள். ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பவன் முஞ்சால் சம்பளம் ரூ.85 கோடியாக இருக்கிறது. தற்போது ஜெரோதா நிறுவனர்களின் சம்பளம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

பணியாளர்களுக்கும்…

இவர்கள் மட்டுமல்லாமல் பணியாளர்களுக்கும் நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவீத பணியாளர்களுக்கு மேல் நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு வரை இசாப் (Employment stock option) மூலமாக நிறுவனத்தின் 6.5 சதவீத பங்குகள் பணியாளர் வசம் உள்ளன. இந்த ஆண்டு மேலும் புதிதாக பங்குகள் வழங்குவதன் மூலம் பணியாளர்கள் வசம் மொத்த 8 சதவீத ஜெரோதா பங்குகள் இருக்கும்.

பணியாளர்களிடம் உள்ள பங்குகளில் 33 சதவீத பங்குகளை விற்று காசாக்கிகொள்ள முடியும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஜூலையில் இந்த பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கை தொடங்கும் என நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 100 கோடி டாலர் சந்தை மதிப்பில் நிறுவனத்தின் பங்குகள் பணியாளர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது. கடந்த ஆண்டு இதற்காக ரூ.65 கோடியை நிறுவனம் ஒதுக்கீடு செய்தது. தற்போது 200 கோடி டாலர் சந்தை மதிப்பில் பங்குகளை திரும்ப வாங்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com